ஆட்சி மாற்றத்தின் பின் இடம்பெறும் வவுனியா மாவட்டத்தின் முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

ஆட்சி மாற்றத்தின் பின் வவுனியா மாவட்டத்திற்கான முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ளது.

அதில் முக்கியமான சில தீர்மானங்கள் எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வவுனியா தமிழ் பிரிவு அமைப்பாளரும், மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரின் இணைப்பாளருமான க.பிறேம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த நவம்பர் 16ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இலங்கையை அழகாக்குவோம் என்னும் தொனிப் பொருளில் அசுத்தப்பட்ட இடங்களை சுத்தப்படுத்தி, அந்த அந்தப் பிரதேசங்களுக்கு ஏற்ப இளைஞர்களால் அழகுப்படுத்தல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக அழகான வடக்கு என்னும் தொனிப்பொருளில் அழகுப்படுத்தல் வேலைத்திட்டம் வடமாகாணத்திலும் முன்னெடுக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியால் மேற்கொள்ளப்படும் இந்த அலங்கார வேலைத்திட்டங்கள் சிங்கள மக்களையும், சிங்கள கலாசாரத்தையும் தழுவியதாக வர்ணப்பூச்சுக்களில் பூசப்படப் போகிறது.

தமிழர்களுடைய கலாசாரம் மழுங்கடிக்கப்படும் என கூறப்பட்டு வருகிறது. இது ஒரு பொய்யான கருத்து. அந்தந்த பிரதேசங்களில் காணப்படும் காலாசாரங்களும், குறியீடுகளும் தான் வர்ணப் பூச்சுக்களில் இடம்பெறும்.

இப்படியான பொய்யான கருத்துக்களை பரப்பி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் எனக் கேட்கின்றேன். தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தமிழ் மக்களை ஒதுக்கி வைக்கவிலலை.

அவர்களுக்கும் முன்னுரிமை வழங்கி சேவைகளை வழங்குமாறு எமக்கு அறிவுறுத்தியுள்ளார். கடந்த 10, 11 வருடங்களாக வவுனியாவில் தமிழ், சிங்கள மக்கள் பாரிய அசாதாரணங்களுக்கு முகம் கொடுத்திருந்தார்கள்.

எந்தவித அபிவிருத்தியும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. அபிவிருத்தியில் பாரிய பின்னடைவு காணப்பட்டது. இதற்கு காரணம் வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு அமைச்சர் றிசாட் பதியுதீன் கைகளில் இருந்தது.

அந்தப் பதவியை வைத்துக் கொண்டு தான் சார்ந்த சமூகத்திற்கும், தன்னுடன் சேர்ந்தவர்களுக்கும் தான் இந்த அபிவிருத்திகளைக் கொண்டு சென்று சேர்த்துள்ளார். இனிவரும் காலங்களில் எந்த மக்களும் பாதிக்காத வகையில் சேவைகள் இடம்பெறும்.

எதிர்வரும் 17ம் திகதி வவுனியா மாவட்ட முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது. அந்தக் கூட்டத்தில் சில நடவடிக்கைகளை முன்னெடுக்க காத்திருக்கின்றோம். இதன் மூலம் வவுனியா வாழ் மக்கள் நன்மையடைவார்கள்.

எங்களுடைய அரசாங்கத்திற்கு எதிராக போலிப் பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டாம். எந்தவொரு மக்களும் பாதிப்படையாத வகையில் இந்த அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் இடம்பெறும்.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இப்படி செய்கையில் இவற்றை களங்கப்படுத்தும் போலிப் பிரச்சாரங்களை செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றேன். இதில் அனைவரும் ஒன்றிணையுங்கள் எனத் தெரிவித்தார்.