19 வயது பாடசாலை மாணவன் பரிதாப மரணம்! பெற்றோர் சோகத்தில்

Report Print Varun in சமூகம்

இலங்கையை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் ஓவியம் வரைந்து கொண்டிருந்த பாடசாலை மாணவன் மீது வாகனத்தை செலுத்திய பௌத்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிக்குவை இரத்தினபுரி நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர் செய்ததை அடுத்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

உரும்வல குசல என்ற பௌத்த பிக்குவே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி நிவிதிகல பொத்துபிட்டிய பிரதேசத்திலேயே குறித்த விபத்து இடம்பெற்றது.

எவ்வாறாயினும் விபத்தை மேற்கொண்டவர் ஒரு ஆசிரியர் என இதற்கு முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நிவிதிகல பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடுத்தே இந்த விபத்தை மேற்கொண்டவர் ஒரு பௌத்த பிக்கு என தெரிய வந்துள்ளது.

சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பௌத்த பிக்கு வாகனத்தை செலுத்தும் போது ஒருவித போதை பொருளை உட்கொண்டிருந்தார் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துளளது.

அவர் செலுத்திய வாகனம் வீதியை விட்டு விலகி வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அருகில் இருந்த, உயிரிழந்த மாணவன் மீது மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் உயிரிழந்த 19 வயது பாடசாலை மாணவனின் பிரேத பரிசோதனை இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டதுடன், கிடைக்கப்பெற்ற சாட்சியங்களின் அடிப்படையில் விபத்தை மேற்கொண்ட பௌத்த பிக்குவை உடனடியாக கைது செய்யுமாறு அவசர பிரேத பரிசோதகர் ஹரிந்த லக்மின தென்னகோன் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

அதனடிப்படையிலே குறித்த பௌத்த பிக்கு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

உயிரிழந்த 19 வயது பாடசாலை மாணவன் இம்முறை கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் தோற்ற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமது பிள்ளையின் மரணம் தொடர்பாக சோகத்தில் வாடும் பெற்றோர், உயிரிழந்த மாணவனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரி பிரதேச மக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதே விபத்தில் காயமடைந்த மேலுமொரு மாணவன் இரத்தினபுரி வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...