ஜனாதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்!

Report Print Theesan in சமூகம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கருத்திற்கு எதிராக வவுனியாவில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்றையதினம் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்குவதுடன், குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்குவது குறித்து சிந்திக்க முடியும். அவர்களை மீளக்கொண்டுவர முடியாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களை சந்தித்து கலந்துரையாடிய போது தெரிவித்துள்ளார்.

இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று மாலை குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1032 நாட்களாக போராடி வரும் உறவினர்களாலே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது போராட்டக்காரர்கள் இது ஒரு பெளத்த சிங்கள நாடு என்ற கோசம் தான் இன்று இலங்கையில் மாபெரும் தமிழ் இனப்படுகொலையை நிகழ்த்தி முடித்திருக்கிறது. எனவே கைது செய்து தண்டிக்கப்பட வேண்டியவர் சீ.வி.விக்னேஸ்வரன் ஐயா அல்ல. இனங்களுக்கிடையே உள்ள சகஜ வாழ்வைச் சிதைத்து, நல்லிணக்கத்தை குழப்பி, நாட்டுக்குள் மீண்டும் ஒரு இனக்கலவரத்தை நடத்தி முடிக்க அழைப்பு விடும் வியத்மக, எளிய, சிங்கள லே போன்ற அமைப்புகளை சேர்ந்தவர்களையே கைது செய்ய வேண்டும்.

மேலும் இவ்வாறான சம்பவங்கள் எமக்கு புலப்படுத்தும் உண்மைகள் என்னவென்றால், நாங்கள் ஒற்றையாட்சிக்குள் இவர்களோடு சேர்ந்து வாழ முடியாது. தமிழ்த் தேசமாக சுயநிர்ணய உரிமையோடு பிரிந்து செல்வது தான் தமிழ் பேசும் மக்களுக்கு நிரந்தர பாதுகாப்பையும், இனப்பிரச்சினைக்கு தீர்வையும் தரும் என்பதேயாகும் என்ற பதாகையை தாங்கியவாறும் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers