மலசலகூடங்கள் காணாமல்போயுள்ளதாக ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் குற்றச்சாட்டு

Report Print Theesan in சமூகம்

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நேற்று காலை இடம்பெற்றிருந்தது.

இதன்போது வவுனியா நகரில் காணப்பட்ட பொது மலசலகூடங்கள் காணாமல்போயுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

தற்போது நகருக்கு வருகைதரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் மலசலகூடங்களின் தேவை அதிகரித்துள்ளது.

இவ்வாறான நிலையில் மலசலகூடங்கள் காணாமல்போனமையால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருவதாக இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக றோயல்காடின் பகுதி, முதலாம் குறுக்குதெரு, குருமன்காடு சந்தி, சிறிமுருகன் தியட்டர் சந்தி ஆகிய பகுதிகளில் பொது மலசலகூடங்கள் முன்னர் இருந்தன.

எனினும் அவை தற்போது இல்லை என்பதுடன், வவுனியா தர்மலிங்கம் சேவிஸ் ஸ்டேசனுக்கு முன்பாக இருந்த மலசலகூடத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே மக்களின் நலன் கருதி குறித்த மலசல கூடங்களை உரிய அதிகாரிகள் கண்டுபிடிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான்,

கந்தசாமி கோவில் வீதியில் உள்ள கடைகள் கிட்டதட்ட 1998 அல்லது அதற்கு கிட்டிய ஆண்டளவில் நகரசபையால் (ரெண்டர்) ஒப்பந்தம் போடப்பட்டு எடுக்கப்பட்டது.

ஒப்பந்தம் எழுதியதில் நானும் ஒருவர். பிழையான தகவலை இங்கு வழங்க வேண்டாம். யாரும் அத்துமீறி பிடித்து வைக்கவில்லை. நகரசபையின் முன்னைய கோவைகளை பார்த்தால் அது புலப்படும் என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அதனை வைத்திருக்கலாம். ஆனால் பொது மலசலகூடமாக அதனை வைத்திருந்தால் பிரச்சனை இல்லை என்று சிவமோகன் இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக நகரசபை தலைவருக்கு தெரியபடுத்தி அந்த விடயங்கள் தொடர்பாக ஆராயுமாறு அரச அதிபரால் தெரிவிக்கப்பட்டது.

Latest Offers

loading...