வவுனியாவில் புலம் பெயர் தமிழர்களின் நலனுக்காக விசேட பூஜை வழிபாடு

Report Print Theesan in சமூகம்

சர்வதேச புலம் பெயர் தினத்தை முன்னிட்டு புலம் பெயர் உறவுகளுக்கான விசேட பூஜை வழிபாடுகள் வவுனியாவில் இன்று நடத்தப்பட்டன.

வவுனியா குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்மன் ஆலயத்தில் விருட்சம் அமைப்பினர் மற்றும் ஆலய பரிபாலன சபை ஏற்பாட்டில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நா.பிரபாகரகுருக்கள் தலைமையில் இந்த பூஜை,வழிபாடுகள் இடம்பெற்றது.

இதன்போது புலம் பெயர்ந்து வாழ்ந்து மறைந்த உறவுகளுக்கும், ஆபத்தான கடற்பயணங்களில் மரணித்த உறவுகளுக்கும்,புலம் பெயரும் போது பல்வேறு சந்தர்ப்பங்களில் மரணித்த உறவுகளுக்கும் இன்னும் அகதி வாழ்க்கை வாழும் உறவுகள் வாழ்வில் விடிவு கிடைக்க வேண்டியும் ஆத்மா சாந்தி பிரார்த்தனையும் விசேட பூசை வழிபாடும் இடம் பெற்றதுடன் அவர்கள் நினைவாக ,நெய் தீபம் ஏற்றி வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டது.

விசேட பூஜை நிகழ்வுகளை தொடர்ந்து சிவஸ்ரீ பிரபாகர குருக்கள் உரையாற்றும் போது,

பலவிதமான வடுக்கள், துன்பங்கள் எதிர்பார்க்காத அரசியல் சூழ்நிலைகள் காரணமாக இந்த நாட்டிலே இருந்து புறப்பட்டு அயல் நாடுகளிலே இன்றும் ஏதோ ஒரு விதத்திலே தங்களுடைய வாழ்க்கையை கொண்டு செல்கிறவர்கள், இன்றைய தினமும் அகதிகளாக இருக்கின்றவர்கள், அயல் நாடுகளில் சென்று தங்களுடைய உயிரை விட்டவர்கள், அயல் நாடு செல்கின்ற போது எதிர்பாராத விதமாக எங்களைவிட்டு பிரிந்தவர்கள் இவ்வாறு எதோ ஒரு வகையிலே எங்களைவிட்டு பிரிந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டும்.

புலம்பெயர் தேசத்தில் வாழுகின்றவர்கள் மனதிலே உள்ள கவலைகள் கடந்து மண்ணில் நல்ல வண்ணம் வாழ வேண்டும்.

அவர்களுடைய எண்ணங்கள், சிந்தனைகள், உதவிகள் எல்லாம் இந்த நாட்டிலே வாழுகின்ற உறவுகளின் மறுவாழ்விற்காக தொடர்ந்து என்றும் இருக்க வேண்டும். அந்நிய நாடுகளுக்கு சென்று எங்களை விட்டு பிரிந்த உறவுகளின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம், என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,

எங்களுடைய உறவுகள் இந்த நாட்டிலே ஏற்பட்டிருக்கக் கூடிய யுத்த சூழ்நிலை காரணமாக கிட்டத்தட்ட பதினைந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஐரோப்பா நாடுகளிலும் அயல் நாடான இந்தியாவிலும் வாழ்ந்து வருகின்றனர்.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு சென்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்யும்போது கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கின்றவர்களுக்காக ஆத்மா சாந்தி பூஜையும், புலம்பெயர்ந்து வாழ்கின்ற உறவுகளின் நலனுக்கான பூஜையும் மிகவும் அவசியமானது.

புலம்பெயர்ந்து இருக்ககூடிய மக்களினுடைய நிதி பங்களிப்பு, உதவிகள், ஒத்தாசைகள் இல்லையென்றால் ஒரு வருட காலத்திலேயே எங்களுடைய மக்கள் பட்டினியில் தான் செத்திருப்பார்கள். அவ்வாறான நேரத்தில் புலம்பெயர்ந்து வாழுகின்ற மக்களின் உதவிகள் தான் பல்வேறு உயிர்களை காப்பாற்றியிருகின்றது, என கருத்துரைத்துள்ளார்.

இந்த வழிபாட்டு நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன், தமிழ் விருட்சம் அமைப்பினர், நகரசபை உறுப்பினர்கள், ஆலய பரிபாலன சபையினர், சமூக ஆர்வலர்கள், நலன் விரும்பிகள், பக்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Latest Offers

loading...