சட்டவிரோத மண் அகழ்விற்க்கு எதிராக யாழில் போராட்டம்

Report Print Sumi in சமூகம்

தமிழர் தாயகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கையை உடன் தடுத்து நிறுத்தக் கோரி யாழ்ப்பாணம் நகரில் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று முற்பகல் 10.30 மணிக்கு இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் ஆட்சிக்கு வந்த அரசு, மணல் உள்ளிட்டவற்றை கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்ததன் பின்னர் வடமாகாணத்தில் தொடர்ச்சியாக மணல், கிரவல் உள்ளிட்டவை சட்டவிரோதமாக அகழப்பட்டு வருகிறது. இதனை தடுத்து நிறுத்துமாறு கோரி மக்கள் பல இடங்களிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

எனினும் பொறுப்பு வாய்ந்தவர்கள் நடவடிக்கை எதனையும் எடுக்காத நிலையே தொடர்ந்து வருகிறது.

சட்டவிரோத மணல் அகழ்வினை தடுக்கும் மக்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு கொலை அச்சுறுத்தலும் விடுக்கப்படுகின்றது எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனை கண்டித்தும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த கோரியும் யாழ்ப்பாணம் மாநகரில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

இதன் போது "இயற்கையை நீ அழித்தாலே, இயற்கையால் நீ அழிவாய்", "சட்டவிரோத மணல் அகழ்வை நிறுத்து, மணல் அகழ்வு மற்றும் வழித்தட அனுமதியை அவசியமாக்கு", "மணல் அள்ளும் உரிமையை அரசியல்வாதிக்கு வழங்காதே!", "இந்த மண் எங்களின் சொந்தமண், எங்களை மீறி யார் வந்தவன், இனிக் கடல் நீர்தான் வரும்” உள்ளிட்ட வாசகங்களைக் கொண்ட பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் ஏந்தியிருந்தனர்.

மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் , சமூக ஆர்வலர்கள் மற்றும் பல பொதுமக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

Latest Offers

loading...