அருட்தந்தையை தாக்கிய பொலிஸ் அதிகாரி இடமாற்றம்

Report Print Ashik in சமூகம்

மன்னார் - தோட்டவெளி பகுதியில் அருட்தந்தையை தாக்கியதாக கூறப்படும், மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் அதிகாரி உயிலங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு பின்னர் வவுனியாவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தோட்டவெளி கிராமத்தில் உள்ளூர் நிர்வாக அதிகாரிகளின் அனுமதிப்பத்திரங்கள் இன்றி தென் பகுதி அரசியல்வாதிகளின் அனுமதிப்பத்திரங்களை மீன் வளர்ப்புக்கென கையில் வைத்து மண் அகழ்வில் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதற்கு அக்கிராம மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை காலை மண் அகழ்வு இடம்பெற்ற போது அப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் பங்குத்தந்தை குறித்த பகுதிக்குச் சென்றிருந்தார்.

இதன்போது அங்கு வந்த மன்னார் பொலிஸ் நிலைய சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி மண் அகழ்வு செய்தவர்களுக்கு ஆதரவாக செயற்பட்டதோடு மக்களை அச்சுறுத்தி, பங்குத்தந்தையை தாக்கி மோசமான வார்த்தைப் பிரயோகங்களையும் மேற்கொண்டுள்ளார். இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் ஆகியோர் சென்று நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.

இந்த நிலையில் மன்னார் பொலிஸ் நிலைய சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...