பணம் மீளப்பெறல் இயந்திரத்தில் 16 இலட்சம் ரூபாவை கொள்ளையிட்ட நபர்

Report Print Steephen Steephen in சமூகம்

கிருளப்பனை, பொல்ஹேன்கொட சந்தியில் உள்ள தனியார் வங்கி ஒன்றுக்கு சொந்தமான பணம் மீளப்பெறல் இயந்திரத்தில் இருந்து 16 இலட்சத்து 33 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட ஒருவரை கிருளப்பனை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் குறித்த வங்கிக்கு சொந்தமான 90 பணம் மீளப்பெற இயந்திரங்களில் பணத்தை வைப்புச் செய்யும் குழுவின் ஊழியராக கடமையாற்றியுள்ளதுடன் நிதி மோசடி செய்த காரணமாக அவர் சேவையில் இருந்து நீக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வங்கி அதிகாரிகள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் குறித்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டிவி கெமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு நாராஹென்பிட்டி தாபரே மாவத்தையில் வாடகை வீட்டில் வசித்து வந்த சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அந்தநபர் தங்கியிருந்த வீட்டில் ஒரு அறையில் கட்டில் மெத்தைக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 இலட்சம் ரூபாயை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

25 வயதான இந்த சந்தேகநபர் ஹொரவபொத்தானைப் பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் புதுக்கடை இலக்கம் 3 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கிருளப்பனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.