சீரற்ற காலநிலை! மட்டக்களப்பில் பல கிராமங்களில் வெள்ளம்

Report Print Kumar in சமூகம்

நாட்டின் பல பகுதிகளிலும் பெய்து வரும் அதிக மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் பல திறக்கப்பட்டுள்ளன.

மாதுறு ஒயா ஆறு பெருக்கெடுத்ததையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று மற்றும் கிரான் பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் முழ்கியுள்ளன.

குறிப்பாக கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பிரம்படித் தீவு, முறுக்கன் தீவு, சாராவெளி, அம்புஸ்குடா போன்ற கிராமங்களில் தற்போது வெள்ள நீர் அதிகரித்து வருவதன் காரணமாக அங்கிருந்து பொதுமக்களை பாதுகாப்பாக படகு மூலம் வெளியேற்றும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மீட்புப் பணிகளில் கடற் படையினரும் மாவட்ட அனர்த்த அபாயக் குறைப்புப் பிரிவினரும், பிரதேச இளைஞர்களும் ஈடுபட்டு வருகின்ற அதேவேளை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஶ்ரீநேசன், மாநகர முதல்வர் தி.சரவணபவன், கோரளைப்பற்று பிரதேசபையின் தவிசாளர் சோபா ஜெயரஞ்சித், கிரான் பிரதேச செயலாளர் ராஜ்பாபு ஆகியோரும் பாதிக்கப்பட்ட மக்களை நலன்புரி நிலையங்களில் தங்க வைத்து அவர்களுக்கான அடிப்படை வசதிகளையும் ஒழுங்கு செய்து வருகின்றனர்.

மேலும் ஏறாவூர் பிரதேச சபைக்குட்பட்ட சித்தாண்டி பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளங் காரணமாக பல நூற்றுக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வந்தாறுமூலை மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு தேவையான ஒழுங்குகளை ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் முரளிதரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியினர் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.