ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து நாடு முழுவதிலும் இன்று அஞ்சலி

Report Print Rakesh in சமூகம்

சுனாமி எனும் ஆழிப்பேரலை கோரத்தாண்டவத்தின் 15ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

இந்தக் கோரத் தாண்டவத்தில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கானோரை நினைவுகூர்ந்து நாடு முழுவதிலும் இன்று அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி உலக மக்களின் மனங்களில் ஆறாத வடுக்களை ஏற்படுத்திவிட்ட நாளாகும்.

இந்தோனேசியாவில் சுமத்திரா தீவின் கடலுக்கு அடியில்ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எழும்பிய ஆழிப்பேரலைகள் இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளின் கரையோரப் பிரதேசங்களைத் தாக்கி ஒரு சொற்ப நேரத்திற்குள்ளேயே 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட மனித உயிர்களைக் காவுகொண்டதோடு கோடிக்கணக்கான உடமைகளையும் அழித்தன.

2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் கடலுக்கு அடியில் 30 கிலோ மீற்றர் ஆழத்தில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிச்டர் அளவில் 9.1 என்ற அளவுக்கு அது பதிவானது. இதையடுத்து கடலில் எழும்பிய ஆழிப்பேரலைகள் இந்தோனேசியா, இந்தியா, மியான்மார், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து உட்பட 14 நாடுகளில் கடும் உயிர் மற்றும் பொருள் சேதத்தை ஏற்படுத்தின.

இந்தப் பேரிடரில் சிக்கி 2 இலட்சத்து 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பரிதாபகரமாக உயிரிழந்தனர். 20 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர்.

இது உலகின் மோசமான இயற்கை சீரழிவுகளில் 6ஆவது இடம் என்ற சோக சாதனையைப் பெற்றது. உயிர் சேதத்துடன், கோடிக்கணக்கான ரூபாவுக்கு பொருட்சேதத்தையும் ஏற்படுத்தியது.

ஆழிப்பேரலை அனர்த்தத்தால் இலங்கையில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வடக்கில் யாழ். மாவட்டத்தின் வடமராட்சி வடக்கு மற்றும் வடமராட்சி கிழக்குப் பிரதேசங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகரம் உள்ளிட்ட கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவும், கிழக்கில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களும், தெற்கில் அம்பாந்தோட்டை, காலி மாவட்டங்களும் ஆழிப்பேரலை அனர்த்தத்தில் மிக மோசமான உயிரழிவுகளையும், சொத்தழிவுகளையும் சந்தித்த இடங்களாகப் பதிவாகியுள்ளன.

சுனாமி எனும் ஆழிப்பேரலை அனர்த்தம் நிகழ்ந்து இன்றுடன் 15 ஆண்டுகள் கடந்துவிட்டாலும் அந்தப் பேரவலம் ஏற்படுத்திவிட்ட வலிகளிலிருந்து இன்னமும் மக்கள் மீளவில்லை. அதற்கு ஆண்டுதோறும் ஆழிப்பேரலை நினைவுநாளில் அந்த அனர்த்தத்தில் காவுகொள்ளப்பட்டவர்களின் கல்லறைகளுக்கு அவர்களின் உறவுகள் சுடர் ஏற்றுகின்றபோது அவர்கள் கதறியழுது கண்ணீர் வடிக்கும் காட்சி சான்று பகர்கின்றது.

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்படுத்திவிட்ட வலிகளும், வடுக்களும் அந்த மக்களின் மனங்களிலிருந்து என்றுமே அகலப்போவதில்லை.

ஆழிப்பேரலை அனர்த்தத்தில் சிக்குண்டு உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் முகமாக, உயிரிழந்தவர்களுக்காக பொதுமக்கள் அனைவரும் இன்று இரண்டு நிமிடங்கள் மெளன

அஞ்சலி செலுத்துமாறு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது. இன்று காலை 09.25 தொடக்கம் 09.27 வரை, இரண்டு நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தும்படி கோரப்பட்டுள்ளது. அதேவேளை, உயிர்நீத்தோரை நினைவுகூர்ந்து நாடு முழுவதிலும் இன்று அஞ்சலி நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

Latest Offers

loading...