யாழ்ப்பாணம் பல்கலைகழக பேரவையின் தீர்மானத்திற்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுதாக்கல்

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணம் பல்கலைகழக பேரவை எடுத்த தீர்மானத்திற்கு எதிராக, சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுதாக்கல் செய்துள்ளார்.

சட்டத்துறையில் பணியாற்றும் சட்டத்தரணிகள் நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடைவிதித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தல் வழங்கியமைக்கும், நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடுக்கும் வகையிலும் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 4ஆம் திகதி அறம்சார் காரணிகள் காரணமாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் பதவியை தான் துறந்த பின்னர் இந்த மனுவை சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.

அந்தவகையில், தற்போது அவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறையின் முதுநிலை விரிவுரையாளர் என்ற பதவி நிலையில் உள்ளார்.

சட்டத்துறையில் போதனைசார் அலுவலகராகப் பணியாற்றுபவர்கள் நீதிமன்றங்களில் முன்னிலையாகி வழக்குகளை நடத்துவதற்கு தடை விதிக்கும் தத்துவம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு கிடையாது என்றும் அதனை ஏற்றுக் கொண்டமையானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவை தனது சுயாதீபத்தியம் இழந்துள்ளது என்றும் குமாரவடிவேல் குருபரன் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்கள், சட்ட மா அதிபர் என 41 எதிர்மனுதாரர்கள் மனுவில் இணைக்கப்பட்டுள்ளனர்.

சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் சார்பில் சட்டத்தரணி மோகன் பாலேந்திரா இந்த மனுவை கடந்த 17ஆம் திகதி உயர்நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் எதிர்வரும் 15ஆம் திகதி தைப்பொங்கலுக்குப் பின்னர் குறிக்கப்பட்ட திகதி ஒன்றில் உயர்நீதிமன்றில் முன்னிலையாகி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் விதிக்கப்பட்ட தடைக்கு இடைக்காலக் கட்டளையை மன்றில் கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சட்டத்துறை முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றும் நான் நீதிமன்றங்களில் முன்னிலையாவதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவை 2011ஆம் ஆண்டு முதல் அனுமதியளித்திருந்தது.

எனினும், பல்கலைக்கழக பேரவைக்கு உள்ள அதிகாரத்தில் தலையீடு செய்து பல்கலைக்கழக மானியங்கள் குழு எனக்குத் தடைவிதித்து தீர்மானம் எடுத்துள்ளது. ஆணைக்குழுவின் இந்தத் தீர்மானத்தை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை தனது சுயாதீபத்தியத்தை இழந்து ஏற்றுக்கொண்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றும் நான் இராணுவத்துக்கு எதிரான குறிப்பிட்ட சில வழக்குகளில் நீதிமன்றில் முன்னிலையாகி வருவதைத் தடைசெய்யும் வகையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மீது இராணுவம் நேரடி அழுத்தத்தை வழங்கியுள்ளது.

அந்த அழுத்தத்தை உள்வாங்கியதன் மூலம் சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட ஏதேனும் ஒரு குடிமகன் தான் விரும்பிய ஒரு சட்டத்தரணியை நியமிக்கும் உரிமை மீறப்பட்டுள்ளது.

மேலும், இராணுவத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தாம் விரும்பிய சட்டத்தரணியை நியமிக்க முடியாமல் போகின்ற நிலைமையானது சட்டத்தொழிலின் சுதந்திரத்துக்கும், அதன்வழி நீதித்துறையின் சுதந்திரத்துக்கும் எதிரானதாகும்.

எனக்கு எதிராக மட்டும் இந்தத் தடையை விதித்தால் பக்கச் சார்பானதாக அமையும் எனக் கருதிய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சட்டத்தரணியாக நீதிமன்றில் முன்னிலையாவதற்கு தடைவிதித்து சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

நாட்டில் உள்ள அத்தனை பல்கலைக்கழகங்களிலும் தற்போது பணியாற்றும் விரிவுரையாளர்களில் நான் மட்டுமே நீதிமன்றங்களில் வழக்குகளை முன்னெடுக்கும் நிலையில் மானியங்கள் ஆணைக்குழு இந்தச் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறை முதுநிலை விரிவுரையாகவுள்ள நான் நீதிமன்ற வழக்குகளில் சட்டத்தரணியாக முன்னிலையாகி வருவதால் எனது போதனைசார் நடவடிக்கைகளில் பிரச்சினை உண்டு என்ற விடயம் பல்கலைக்கழக நிர்வாகத்தினாலோ, பல்கலைக்கழக பேரவையினாலோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுட்டிக்காட்டப்படவில்லை.

உயர் கல்வி நிறுவனங்களின் விரிவுரையாளர்கள் தமது துறைசார்ந்த தொழில்சார் ஈடுபாட்டைத் தக்க வைக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் ஆக்கப்பட்ட பல்கலைக்கழக ஆசிரியருக்கான ஒழுக்கநெறிக் கோவை குறிப்பிடுகின்றது.

அதனடிப்படையிலே வைத்தியர்களும், பொறியியலாளர்களும் தனது துறைகளில் கடமையாற்றுகின்றனர்.

அதேபோன்று சட்ட ஆசிரியர் ஒருவருக்கு சட்டத்தரணியாக தொழில் செய்வது பல்கலைக்கழக விரிவுரையாளர் சார்ந்த கடமைகளின் உள்ளடங்கும்.

எனினும், என் துறை சார்ந்த சட்டத்தரணி தொழிலை முன்னெடுக்க தடை விதிப்பது பாரபட்சமானதாகும். இதுதொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கொள்ளை ஆவணங்கள் இரண்டு மனுவில் இணைக்கப்பட்டுள்ளன.

2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறையில் நான் நிரந்தரமாக நியமிக்கப்பட்டதன் பின்னர் கற்பித்தல் சார்ந்தும், ஆராய்ச்சி சார்ந்தும், நிர்வாகம் சார்ந்தும் நான் அர்ப்பணிப்புடன் பங்களித்துள்ளேன்.

குறிப்பாக கடந்த 3 வருடங்களில் துறைத்தலைவராகக் கடமையாற்றிய காலப்பகுதியிலும் எனது துறையின் வளர்ச்சிக்கு நான் பங்காற்றியுள்ளேன். (மனுதாரரால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புத் தொடர்பில் மன்றின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆவணங்கள் மனுவில் இணைக்கப்பட்டுள்ளன.)

அத்துடன், நான் சட்டத்தரணியாக நீதிமன்றங்களில் முன்னிலையாகுவதைத் தடை செய்ய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எடுத்த தீர்மானம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஆவணங்களை வழங்குமாறு மானியங்கள் ஆணைக்குழுவிடம் தகவல் அறியும் சட்டம் ஊடாகக் கோரியிருந்தேன்.

அந்த ஆவணங்களில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு இராணுவத்தால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தை எனக்கு வழங்க வேண்டாம் என இராணுவம் ஆணைக்குழுவுக்கு வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைய அந்தக் கடிதத்தை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வழங்க மானியங்கள் ஆணைக்குழு மறுத்துள்ளது.

இதுதொடர்பில் தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கு நான் மேன்முறையீடு செய்துள்ளேன்.

இவ்வாறு தனது தரப்பு நியாயங்களை முன்வைத்து 97 பந்திகள் அடங்கிய 29 பக்கங்களைக் கொண்டதாக சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரனின் அடிப்படை உரிமை மனு அமைந்துள்ளது.

மனுவில் 26 இணைப்புக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பின்னணி இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர் என்று பெற்றோரால் தெரிவிக்கப்படும் இளைஞர்கள் 12 பேர் தொடர்பில் 2017ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் திகதி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஆள்கொணர்வு எழுத்தானை மனுக்கள் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை சட்டத்தரணி எஸ்.சுபாசினி தாக்கல் செய்தார். அந்த மனுக்களின் ஊடாக பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று சட்டத்தரணிகு.குருபரன் முன்னிலையாகி வாதாடி வருகிறார்.

1996ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ அதிகாரியாகவிருந்த துமிந்த கெப்பிட்டிவெலான தலைமையிலான படையினர் கைது செய்து கொண்டு சென்ற 24 இளைஞர்களை பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர்.

தமது உறவினர்களை மீட்டுத் தருமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள் சட்டத்தரணிகள் எஸ்.சுபாசினி ஆகியோர் ஊடாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கடந்த நவம்பர் 9ஆம் திகதி 12 பேர் சார்பில் தனித்தனியே ஆள்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அவற்றில் 3 மனுக்களை மட்டும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்று ஏற்றுக்கொண்டது.

ஏற்றுக்கொள்ளப்பட்ட 3 பேரின் ஆள்கொணர்வு மனுக்களில் முதலாவது பிரதிவாதியாக இளைஞர்களை கைது செய்து சென்ற போது நாவற்குழி முகாமின் அதிகாரியாகவும் தற்போது இலங்கை இராணுவத்தின் காலாற்படையணியின் பணிப்பாளராகவும் செயற்படும் துமிந்த கெப்பிட்டிவெலான சேர்க்கப்பட்டுள்ளார்.

2ஆம் பிரதிவாதியாக இலங்கை இராணுவ தளபதி மற்றும் 3ஆம் பிரதிவாதியாக சட்ட மா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இதில் சட்ட மா அதிபர் திணைக்களம் முன்வைத்த விண்ணப்பத்தையடுத்து முதலாவது பிரதிவாதி துமிந்த கெப்பிட்டிவெலான சார்பில் பிரதி மன்றாடியார் அதிபதி சேய்த்திய குணசேகர முன்னிலையாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது.

இந்த மனுக்கள் தொடர்பான ஆரம்ப விசாரணை சுமார் இரண்டு வருடங்கள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்ற நிலையில் கடந்த மே 10ஆம் திகதி இடைக்காலக் கட்டளையிடப்பட்டது.

மனுதாரர்களின் கோரிக்கைகள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து மேல் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் படி, சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றுக்கு பொறுப்பு பாரப்படுத்தப்பட்டது.

சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் இந்த மனுக்கள் மீதான விசாரணை ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போது, பாதிக்கப்பட்ட தரப்பான மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி கு.குருபரன் முன்னிலையாகியிருந்தார்.

எதிர்மனுதாரர்கள் சார்பில் பிரதி மன்றாடியார் அதிபதி சேய்த்திய குணசேகர முன்னிலையானார்.

மனுக்கள் மீதான விசாரணைகள் நிறைவடைந்து மன்றிலிருந்து சட்டத்தரணி கு.குருபரன் வெளியேறிய போது அவரை, இராணுவப் புலனாய்வாளர் ஒருவர் அலைபேசியில் ஒளிப்படமோ அல்லது காணொளிப் பதிவோ செய்திருந்தார்.

அந்த இராணுவப் புலனாய்வாளர் பிரதி மன்றாடியார் அதிபதி சேய்த்திய குணசேகரவின் வாகனத்தில் ஏறியிருந்து ஒளிப்படம் எடுத்ததையும் அதில் பயணித்தமையையும் சட்டத்தரணி கு.குருபரன் கண்டிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் உடனடியாக சாவகச்சேரி நீதிவானின் கவனத்துக்கு கொண்டு வந்த சட்டத்தரணி கு.குருபரன், சட்ட மா அதிபர் உள்ளிட்ட தரப்புகளுக்கு கடிதம் ஊடாகவும் முறையிட்டிருந்தார்.

தங்களால் முன்வைக்கப்பட்ட விடயம் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதுதொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று சட்ட மா அதிபரால் சட்டத்தரணி கு.குருபரனுக்கு பதிலளிக்கப்பட்டும் இருந்தது.