சட்டவிரோதமாக இலங்கை வந்தவர்களை வளைத்துப் பிடித்தது இலங்கை கடற்படை!

Report Print Rakesh in சமூகம்

கடந்த 26ஆம் திகதி படகில் சட்டவிரோதமாக நெடுந்தீவுக்கு வந்திறங்கிய குற்றச்சாட்டில் 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம், நெடுந்தீவுக் கடல்கரையொன்றில் நாட்டுப் படகு ஒன்றில் மூன்று ஆண்கள், ஒரு பெண் ஆகியோர் கடந்த 26ஆம் திகதி காலை 6 மணியவில் வந்திறங்கினர் என்று தகவல் பரவியதையடுத்து நெடுந்தீவில் பாதுகாப்புத் தரப்பினர் தேடுதல் நடத்தியுள்ளனர்.

இது தொடர்பாகத் தொடர் விசாரணைகள் நடந்த நிலையில், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தமிழகத்தில் இருந்தே படகு மூலம் நெடுந்தீவு வந்துள்ளனர் என்றும், அங்குள்ள மண்டபம் முகாமில் தங்கியிருந்த அந்தோணி குருஸ், முஜிபுர் ரஹ்மான், முத்து நாகரூபன், இந்திராணி, ரமேஸ் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முஜிபுர் 2013ஆம் ஆண்டும், அந்தோணி குருஸ் 2017ஆம் ஆண்டும் பேசாலையில் இருந்து படகு மூலம் இந்தியா சென்றிருந்தனர் என்றும், ரமேஸின் தாய் இலங்கையைச் சேர்ந்தவர் என்றாலும் ரமேஸ் இந்தியாவில் பிறந்தவர் என்றும் கூறப்படுகின்றது.

தமிழகத்தின் பாம்பன், பிரான்ஸிஸ் நகரைச் சேர்ந்த ஜஸ்ரின் என்பரின் படகு கடந்த வியாழக்கிழமை காணாமல் போயிருந்தது.

அது தொடர்பில் அவர் அந்த நாட்டுப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தார். அந்தப் படகிலேயே இவர்கள் இலங்கை திரும்பியிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.