திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள்! தீர்வு பெற்று தருவதாக கூறிய மகிந்த

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

2006ம் ஆண்டு ஜனவரி 02ம் திகதி திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் நினைவேந்தல் நிகழ்வு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

திருகோணமலை காந்தி சிலைக்கு அருகில் இன்று (02) மாலை இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதில் 2006ம் ஆண்டு திருகோணமலையில் இலங்கை அரச படையினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களுக்கும் அதேபோன்று மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களுக்கும் சர்வதேச ரீதியாக நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அத்துடன் கடந்த மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்கும்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் மற்றும் முக்கியஸ்தர்கள் ஐந்து பேர் சேர்ந்து கொழும்பில் படுகொலை தொடர்பாக மகிந்த ராஜபக்சவிடம் சிறந்த தீர்வினைப் பெற்றுத்தருமாறு கூறிய போது,

தனக்கு அரச படையினரால் 5 மாணவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அதற்கு நீதியான தீர்வு ஒன்றினை வழங்குவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இதன்போது தெரிவித்தார் எனவும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இதேவேளை 14 வருடங்கள் கடந்தும் இதுவரைக்கும் நீதி கிடைக்கவில்லை எனவும் அவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தாங்கள் போராடுவதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் இதன்போதுசுட்டிக்காட்டினார்.

அத்துடன் நீதி கிடைக்காவிட்டால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாடுவதாகவும் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்து நீதிக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்நினைவஞ்சலி நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.