போலி மாணிக்க கற்களுடன் 6 பேர் கல்முனையில் கைது

Report Print Varunan in சமூகம்

பல இலட்சம் பெறுமதியுடையதென ஏமாற்றி போலி மாணிக்ககற்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்ய முயன்றதாக சந்தேகத்தின் அடிப்படையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அருகே நேற்றிரவு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்முனையில் நிலைகொண்டுள்ள கடற்படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகல்களை அடுத்து பொலிஸாரின் உதவியுடன் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து அவர்கள் பயணம் செய்ததாக நம்பப்படும் நிசான் ராக வான், 6 கைத்தொலைப் பேசிகள், பல வர்ணங்களை உடைய போலி மாணிக்க கற்கள் என்பன மீட்கப்பட்டு கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு சந்தேகநபர்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இச்சந்தேகநபர்கள் பயணம் செய்த வான் வாடகை அடிப்படையில் பெறப்பட்டதெனவும், கைதானவர்கள் சுமார் 24 முதல் 43 வயது உடையவர்கள் எனவும் அம்பாறை மற்றும் பசறை பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் இதன்போது கைதான 6 சந்தேகநபர்களும், சான்றுப் பொருட்களும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.