இலங்கையிலிருந்து படகு வழியாக வெளியேறுபவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிப்பு

Report Print Malar in சமூகம்

கடந்த 2019ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நோக்கி படகு வழியாக வெளியேறிய இலங்கையர்களின் எண்ணிக்கை 175 ஆக உயர்ந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

2016ஆம் ஆண்டு, 2017ஆம் ஆண்டு மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் இலங்கையிலிருந்து படகு மூலம் வெளியேற முயன்றவர்களின் எண்ணிக்கை சராசரியாக 64 ஆக இருந்துள்ளது.

அந்தவகையில் தற்போதைய எண்ணிக்கை கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இரண்டு மடங்காக அதிகரித்துள்ள நிலையில், இலங்கை கடற்படையும், விமானப் படையும் அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு படையுடன் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு வெளியேறியவர்களில் பெரும்பான்மையானோர் சிலாபம், மட்டக்களப்பு, திருகோணமலை, தேவேந்திரமுனை ஆகிய பகுதிகளிலிருந்து வெளியேறியர்கள் என இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் இசுரு சூரியபண்டார தெரிவித்திருந்தார்.

மேலும் அவர், இதில் சிலர் நாட்டை விட்டு சட்டவிரோதமாக வெளியேற தயாராகிக் கொண்டிருந்த நிலையிலும் பலர் இலங்கையின் கடல் எல்லைக்குள் வைத்தும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனக் கூறியிருக்கிறார்.

ஆட்கடத்தல் மற்றும் மக்கள் கடலில் தங்களை உயிரை பணயம் வைத்து பயணிப்பதை தடுக்க இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அரசு ஒரு வலுவான உறவை கொண்டிருப்பதாக அவுஸ்திரேலியா எல்லைப் பாதுகாப்பு படை தளபதி கிரெய்க் புரினி குறிப்பிட்டிருந்ததை இசுரு சூரியபண்டார நினைவூட்டியுள்ளார்.