பாவனையாளர் சட்டத்தை மீறிய 1075 பேரிடமிருந்து தண்டப்பணம் அறவீடு

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

2019ஆம் ஆண்டு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் சட்டத்தை மீறிய 1075 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் 44 இலட்சத்து 23,000 தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில், பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் சட்டத்தை மீறிய வியாபார நிலையங்களுக்கு எதிராக கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, பொத்துவில், அம்பாறை மற்றும் தெஹியத்தகண்டிய ஆகிய நீதவான் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டது.

இதன்போதே தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாக அதிகாரசபையின் மாவட்ட அதிகாரி என்.எம்.சப்ராஸ் தெரிவித்தார்.

இதில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல், காட்சிப்படுத்தல், நுகர்வோரை ஏமாற்றும் செயற்பாடுகளில் ஈடுபடுதல், அத்தியாவசியப் பொருள்களின் கட்டுப்பாட்டு விலையினை விட அதிக விலைக்கு விற்பனை செய்தல், மின்சார மற்றும் இலத்திரனியல் உபகரணங்களுக்கு கட்டுறுத்து காலம் வழங்காமை, பொருள்களை பதுக்கி வைத்தல், தரச்சான்று இல்லாத பொருள்களை விற்றல் போன்ற பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தினை மீறியவர்கள் மீதே சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த 19.12.2019 அன்று அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நாட்டரிசி மற்றும் சம்பா அரிசிக்கான உயர்ந்த பட்ச கட்டுப்பாட்டு விலை 98 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 30 வர்த்தகர்களுக்கு எதிராக எதிர்வரும் வாரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அரிசியை அதிகரித்த விலைக்கு விற்பனை செய்கின்றமை குறித்த முறைப்பாடுகள் தொடர்பாக சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள அதிகாரிகள் எந்த நேரத்திலும் தயார் நிலையில் உள்ளனர் என்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட உத்தியோகத்தர் கூறியுள்ளார்.