நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு விவசாயிகள் கோரிக்கை

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பகுதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக விவசாயிகள் பாரிய நஷ்டங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் மண்டூர் கமல சேவைகள் அபிவிருத்தி பிரிவு, வெல்லாவெளி கமல சேவைகள் அபிவிருத்தி பிரிவு ஆகியவற்றில் வெள்ளம் அனர்த்தம் காரணமாக 6069 ஏக்கர் காணிகள் அழிவடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கமநலசேவைகள் நிலைய உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் தொடர்ந்து இழப்புகள் தொடர்பான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சேதம் இன்னும் அதிகமாக இருக்கலாம் எனவும் கமநல சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், கடந்த முறை ஏற்பட்ட வெள்ள அனர்த்தக் காலத்திலும், தற்போதும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளதாகவும் தமது நிலையினை ஜனாதிபதி கருத்தில் கொண்டு நஷ்ட ஈடுகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.