கொடூரமாக கொலை செய்யப்பட்ட அரியவகை சிறுத்தை

Report Print Banu in சமூகம்

உடவலவே தேசிய பூங்கா அருகே மவு அரா நீர்த்தேக்கத்திற்கு அருகாமையில் இலங்கைக்கு உரித்தான சிறுத்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

முன்கால்கள் இரண்டும் துண்டிக்கப்பட்டு, பற்கள் பிடுங்கப்பட்டு மிகக்கொடூரமாக குறித்த சிறுத்தை கொலை செய்யப்பட்டுள்ளது.

வேட்டைக்காரர்களால் வியாபார நோக்கத்திற்காக குறித்த சிறுத்தை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் மிகவும் குறைந்த அளவில் காணப்படும் குறித்த அரியவகை சிறுத்தை, விலங்கு மற்றும் தாவர கட்டளை சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படவேண்டும் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

உடவலவே தேசிய பூங்கா அதிகாரிகளின் அசமந்த போக்கினாலே குறித்த சம்பவம் ஏற்பட்டுள்ளது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதேவேளை யட்டியாந்தோட்டை பகுதியில் நேற்றையதினம் புலி ஒன்றும் கொலை செய்யப்பட்டுள்ளது. நாட்டில் தொடர்ச்சியாக புலிகளின் உயிரிழப்புக்கள் தொடர்பிலான சம்பவங்கள் பதிவாகி வருகின்றது.

விலங்குகளை பாதுகாப்பதற்காக சிவப்பு உத்தரவு புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ள இலங்கை புலிகள் தொடர்ச்சியாக அழிவை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.