பம்பலப்பிட்டி கடற்கரையில் கரையொதுங்கிய கடற்சிங்கம் மாயம்

Report Print Banu in சமூகம்

பம்பலப்பிட்டி கடற்கரையில் கரையொதுங்கியிருந்த கடற்சிங்கம் காணாமல் போயுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு - பம்பலப்பிட்டி கடற்பகுதியில் கரையொதுங்கி அங்குள்ள உள்ள பாறைகளுக்கு இடையே ஓய்வெடுத்து வந்த கடற்சிங்கமே கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளது.

கடற்சிங்கம் காணாமல் போனமை தொடர்பில் நேற்று திணைக்களத்தின் ஊடகத் தொடர்பாளர் ஹாசினி சரச்சந்திரா அறிவித்துள்ளார்.

அதில் அவர் தெரிவிக்கையில்,

டிசம்பர் 18 ஆம் திகதிக்கு பின்னர் குறித்த பகுதியில் கடற்சிங்கத்தின் அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.ஒரு வேளை அது தனது சொந்த இடத்திற்கு திரும்பிச் சென்றிருக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.

குறித்த கடற்சிங்கம் கடந்த வருடம் நவம்பர் 21 ஆம்திகதி மிரிச கடற்பகுதியில் முதன் முதலாக அவதானிக்கப்பட்டுள்ளதுடன் பின்னர் பம்பலப்பிட்டி கடற்பகுதியில் தொடர்ச்சியாக காணப்பட்டது.

இந்த உயிரினங்கள் வருடத்திற்கு ஒரு முறை கரைக்கு வருகின்றன, வழக்கமாக இனப்பெருக்க காலத்திற்குப் பிறகு, தேவையான சூரிய வெப்பம், சூரிய ஒளியை கரையில் பெற்றுக்கொள்வதால் அவை தண்ணீருக்குள் நுழைவது இல்லை, என்று குறிப்பிட்டுள்ளார்.

வனவிலங்கு கால்நடை அதிகாரிகள், மேல் மாகாண வனவிலங்கு பிராந்திய அதிகாரிகள், கடலோர பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் கடற்படை வீரர்கள் பம்பலப்பிட்டியில் குறித்த கடற்சிங்கம் தங்கியிருந்த காலப்பகுதியில் அதனை பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.