தமிழ் பெண் அரச ஊழியர் மீது தாக்குதல் மேற்கொண்ட உத்தியோகத்தர் தலைமறைவு! பொலிஸார் தீவிர தேடுதல்

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

அம்பாறை - சம்மாந்துறை,நிந்தவூரில் கமநல சேவைகள் திணைக்களத்தில் பணிபுரியும் தமிழ் பெண் ஒருவரை தாக்கிய உத்தியோகத்தர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் அரச உத்தியோகத்தர்கள் கடமை பொறுப்பேற்கும் நிகழ்வின் போது சம்மாந்துறை கமநல சேவை திணைக்களத்தில் பணிபுரியும் தமிழ் பெண் அரச ஊழியர் ஒருவரை அதே திணைக்களத்தில் விவசாய அபிவிருத்தி உத்தியோகிஸ்தராக பணியாற்றும் நபர் தாக்கியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் தவப்பிரியா செய்த முறைப்பாட்டின் பேரிலும், இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விடுத்த உத்தரவின் பேரிலும் அவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது குறித்த நபரை கைது செய்ய சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரி ஜயலத் தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் தலைமறைவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து குறித்த நபரை கைது செய்வதற்காக பொலிஸார் தீவிர விசாரணைகளையும்,தேடுதல்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனைப்பிராந்திய அலுவலகத்தில் நடைபெறவிருக்கும் இவ்விசாரணைக்கும் அழைக்கப்பட்டுள்ள நிலையில்,அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.