சரவணபவன் எம்.பியின் வீட்டில் திருடர்கள் கைவரிசை! மூவர் மடக்கிப் பிடிப்பு

Report Print Rakesh in சமூகம்
677Shares

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் வீட்டில் பழைய இரும்புகளைத் திருடிச் சென்ற மூவர் மடக்கிப் பிடிக்கப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.கோப்பாய், இராசபாதையில் உள்ள அவரது இல்லத்தில் இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

சரவணபவன் வீட்டில் இல்லாதபோது அவரது வீட்டுக்கு பின்புறமாக உள்ள மதிலால் வளவுக்குள் குதித்த மூவர், வீட்டின் பின்புறமிருந்த இரும்புக் கதிரைகள் உள்ளிட்ட பழைய இரும்புகளை திருடி முச்சக்கர வண்டி ஒன்றில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

முச்சக்கர வண்டி சிறிது தூரம் பயணித்த நிலையில், சரவணபவனின் வீட்டில் பொறுப்பாக இருந்தவர் துரத்திச் சென்று அவர்களை பிடித்துள்ளார்.

இதனடிப்படையில் கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவரை கைது செய்தததுடன் முச்சக்கர வண்டியையும் கைப்பற்றியுள்ளனர்.

பொறுப்பாக இருந்தவர் நேற்று மாலை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டை வழங்கியுள்ளார்.

இந்தநிலையில் சரவணபவன் நேற்றிரவு தனது வாக்குமூலத்தை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் வழங்கியுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட பழைய இரும்புகள் தன்னுடையவை என அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், திருநெல்வேலி பாற்பண்ணை வீதியைச் சேர்ந்த மூவரும் கைதுசெய்யப்பட்டு, கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.