கிளிநொச்சி பொது நூலக காணியை விடுவிக்க கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி பொது நூலக காணியை விடுவிக்க கோரி கரைச்சி பிரதேச தவிசாளர், ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

கரைச்சி பிரதேசசபையின் இரண்டாவது சபை அமர்வு கடந்த 23.02.2018 அன்று நடைபெற்றிருந்தது. இதன்போது பிரதேசசபையின் பொது நூலகம் தொடர்பில் விவாதிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் இராணுவம் கைப்பற்றி வைத்திருக்கும் 3.5 ஏக்கர் நிலப்பரப்பினை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதென ஏகமதாக தீர்மானிக்கப்பட்டது.

இந்த தீர்மானத்திற்கு அமைவாக கரைச்சி பிரதேச சபையின் தவிசாளரினால் 14.05.2018ஆம் திகதி 571 படைப்பிரிவின் கட்டளை அதிகாரிக்கும், அப்போது இருந்த வட மாகாண ஆளுநர், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கும் குறித்த நூலக காணி விடுவிப்பு தொடர்பாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இன்று வரை சாதகமான பதில் எதுவும் கிடைக்கப் பெறவில்லை.

இந்த 3.5 ஏக்கர் விஸ்திரணம் உள்ள கரைச்சி பிரதேசசபை வளாகத்தில் 1975ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்த செல்லையா குமாரசூரியரால் எண்கோண வடிவிலான பொது நூலமுகம், விளையாட்டு அரங்கத்துடன் கூடிய மைதானமும் நவீன சந்தை கட்ட தொகுதியும் வடிவமைக்கப்பட்டு அப்போது பிரதம மந்திரியாக இருந்த சிறீமாவோ பண்டாரநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டது.

2009ஆம் ஆண்டு மீளக்குடியமர்வுக்கு பின் கரைச்சி பிரதேசசபைக்குரிய பொது நூலக வளாகம் இராணுவத்தினரின் பயன்பாட்டில் உள்ளமையால் இந்த காணியினை விடுவித்து கிளிநொச்சிக்கான பொது நூலகத்தினை நிர்மாணித்து மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்க ஏதுவாக கரைச்சி பிரதேசசபை பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

எனினும் கரைச்சி பிரதேசசபையினால் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் நூலகத்திற்குரிய காணி விடுவிக்கப்படாமல் இருப்பதனால் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

நாட்டில் தற்போது புதிய அரசாங்கம் பதவி ஏற்றுள்ள நிலையில் கிளிநொச்சி மக்களின் மிக முக்கிய தேவையான பொது நூலகத்தினை நிர்மாணிப்பதற்காக நாட்டின் ஜனாதிபதி கோட்டாபயவும், பிரதமர் மகிந்தவும் இக்காணியை விடுவிப்பதற்குரிய மேலான நடவடிக்கையை மேற்கொண்டு உதவுமாறு கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் உத்தியோகபூர்வ கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.