முடிவிற்கு வந்தது மட்டக்களப்பு சிறைக்கைதிகளின் போராட்டம்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் மேற்கொண்டு வந்த போராட்டம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள சிறைக்கைதிகள் 30 பேர் இன்று காலை சிறைச்சாலையின் கூரை மேல் ஏறி போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

சிறைச்சாலையில் இருந்த கைதியொருவர் இன்று காலை மரணமானதை தொடர்ந்து குறித்த கைதியின் மரணம் தொடர்பில் நீதிபதி நேரடியாக வந்து விசாரணைகளை மேற்கொள்ள வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சாய்ச்சலினால் சிறைச்சாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதியொருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் குறித்த சிறைக்கைதியின் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள சிறைக்கைதிகள் நீதிபதி நேரடியாக சிறைச்சாலைக்கு வந்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

குறித்த சிறைக்கதிக்கு முறையான சிகிச்சைகள் வழங்கப்படவில்லை எனவும் முறையான சிகிச்சைகள் வழங்கப்பட்டிருந்தால் அவர் இறந்திருக்க மாட்டார் எனவும் சிறைக்கைதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மரணமான சிறைக்கைதியின் மரண விசாரணைகளை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜீவராணி கருப்பையா விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

மாலை வரையில் போராட்டம் நடைபெற்ற நிலையில் நீதிபதி சிறைச்சாலைக்கு வராத நிலையிலும் சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸ் உயர் அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று சிறைக்கைதிகள் கூரையில் இருந்து இறங்கி சென்று போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வந்துள்ளனர்.