புதிய இணைப்பு
தமிழ் பெண் அரச ஊழியரை தாக்கிய குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்ட தலைமை உத்தியோகத்தரை எதிர்வரும் ஜனவரி மாதம் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் இன்று குறித்தநபரை முன்னிலைப்படுத்தியபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் சார்பில் ஆஜரான பல சட்டத்தரணிகள் தமது தரப்பு வாதங்களை முன்வைத்து பிணை கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.
இருந்தபோதிலும் பிணைகோரிக்கை நீதிவானினால் நிராகரிக்கப்பட்டு எதிர்வரும் ஜனவரி மாதம் 14ஆம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இதன்போது நீதிமன்ற வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசீம், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெய சிறீல், பொது அமைப்பின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
முதலாம் இணைப்பு
தமிழ் பெண் அரச ஊழியரொருவருக்கு அறைந்த தலைமை உத்தியோகத்தரை பொலிஸார் இன்று அதிகாலை கைதுசெய்துள்ளனர்.
சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று அவரை ஆஜராக்குவதற்கு பொலிஸார் ஏற்பாடு செய்திருந்தனர்.
நிந்தவூர் கமநல கேந்திர மத்திய நிலையத்தில் பணியாற்றும் நிலைய முகாமைத்துவ உதவியாளருக்கு அந்நிலையத்தின் தலைமை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜ.எல்.ஏ.கார்லிக் என்பவர் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார்.
இதன்போது தாக்குதல் மேற்கொண்ட உத்தியோகத்தரைக் கைது செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுடன், பொலிஸார் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்காரணமாக பெண்ணுரிமை அமைப்புகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் தவிர்க்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறைப்பொலிஸ் நிலையத்தின் புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி சுரந்த ஜயலத் எடுத்த முயற்சிக்கு காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் நேரில் சென்று பாராட்டுத் தெரிவித்தார்.
இதேவேளை கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த தாக்குதலுக்குள்ளான பெண் ஊழியர் மேலதிக சிகிச்சைக்காக நேற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.