கிரவல் கொண்டு செல்வதை நிறுத்துமாறு கோரி செட்டிக்குளத்தில் ஆர்ப்பாட்டம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா, செட்டிக்குளத்தில் நல்ல நிலையில் உள்ள வீதியால் மன்னாருக்கு கிரவல் கொண்டு செல்லப்படுவதை நிறுத்துமாறு இன்று வீதியை மறித்து சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, செட்டிக்குளம், உலுக்குளம் வீதியில் வீதித்தடையை ஏற்படுத்தி, கிரவல் கொண்டு சென்ற டிப்பர் வாகனங்களை வழிமறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

செட்டிக்குளம், உலுக்குளம் வீதி 2014ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்ட நிலையில் குறித்த வீதியின் ஊடாகவே மதவாச்சியில் இருந்து மன்னாருக்கான கிரவல் கொண்டு செல்லப்படுவதாகவும், செட்டிக்குளத்தில் புதிதாக அனுமதி வழங்கப்பட்டுள்ள கிரவல் அகழ்வினால் அங்கிருந்து செல்லும் டிப்பர்களாலும் வீதி சேதமடைந்து வருவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் குறித்த இடத்திற்கு வந்த செட்டிக்குளம் பொலிஸ் அதிகாரிகள் குழு விடயங்களைக் கேட்டறிந்து கொண்டு அதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஏற்ற வழிமுறைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது குறித்த பகுதிக்கு வருகை தந்த செட்டிகுளம் பிரதேச செயலாளர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

செட்டிகுளத்தில் இருந்து வவுனியாவிற்கு செல்லும் மூன்று வீதிகளில் பூவரசங்குளம் ஊடாக செல்லும் வீதி மற்றும் வீரபுரம் ஊடாக செல்லும் வீதிகள் மிக மோசமாக சேதடைந்துள்ளமையினால் தற்போது உலுக்குளம் வீதி மாத்திரமே நல்ல நிலையில் பாவனையில் உள்ளதுடன் செட்டிகுளம் வைத்தியசாலையில் இருந்து அம்புலன்ஸ்கள் செல்லும் பிரதான வீதியாகவும் உலுக்குளம் வீதி மாத்திரமே காணப்படுகின்றது.

எனவே, குறித் வீதியால் கிரவல் கொண்டு செல்வதை தடுக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்களினால் செட்டிக்குளம் பிரதேச செயலாளருக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இதனை செவிமடுத்த பிரதேச செயலாளர் இவ் வீதியினூடாக கிரவல் கொண்டு செல்லப்படுவதற்கான வீதி அனுமதியை தடை செய்யுமாறு வவுனியா அரசாங்க அதிபரூடாக அனுராதபுரம் அரசாங்க அதிபருக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்துவதாகவும் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கும் இவ்வீதியூடாக கிரவல் கொண்டு செல்வதற்கான அனுமதியை நிறுத்துமாறு எழுத்து மூலம் அறிவிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் செட்டிகுளம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் குறித்த வீதியில் அதி வேகமாக செல்லும் வாகனங்கள் மற்றும் வீதி ஒழுங்கை பின்பற்றாத வாகனங்கள் தொடர்பிலும் தாம் உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் கிரவல் இன்றி வெற்று டிப்பர்கள் மாத்திரம் இவ்வீதியை பயன்படுத்த அனுமதிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டவர்களுக்கு வழங்கிய உறுதிமொழியை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றிருந்தனர்.