மாணவர்களுகளின் பாடசாலை அனுமதி தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது! சி.வி.கே.சிவஞானம்

Report Print Malar in சமூகம்
147Shares

2020ஆம் ஆண்டிற்கான தரம் ஒன்று மாணவர்களுக்கான அனுமதி தொடர்பாக கடந்த மூன்று தினங்களாக பலர் எமக்கு முறைப்பாடுகளைத் தெரிவித்துள்ளதாக வடமாகாணசபை முன்னாள் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வட மாகாணசபை கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் இளங்கோவனுக்கு இன்று சிவஞானம் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த கடிதத்தில்,

10 அல்லது 11 பேர் வரை கல்வித்திணைக்களம், 2019 டிசம்பர் மாத ஆரம்பத்தில் வெளியிட்ட அனுமதிப்பட்டியலில் தமது பிள்ளைகளின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததாகவும் பின்னர் 2019.12.31ஆம் திகதி இரண்டாவது பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டபோது தங்களது பிள்ளைகளது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் மாத ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி தாங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாடசாலைக்குச் சென்று அனுமதியை உறுதி செய்திருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

சிலர் தமது விண்ணப்பத்தில் தெரிவுசெய்த இரண்டு பாடசாலைகளின் பட்டியல்களிலும் தமது பிள்ளையின் பெயர் காணப்பட்டபோது அதில் ஒன்றினைக் கைவிடுவதாக அறிவித்தும் உள்ளனர்.

அப்படியானவர்கள் இரண்டு பாடசாலைகளையும் இழந்தவர்களாகக் காணப்படுகின்றனர்.

முதலாவது பட்டியலில் அனுமதி வழங்கப்பட்டபோது அந்தந்த விண்ணப்பங்கள் முறையானவை என்று ஏற்றுக்கொண்டு அனுமதியளித்த கல்வித் திணைக்களம், வருடக் கடைசியில் ஏதோ காரணத்துக்காக அந்தப்பெயர்களை நீக்குவானது எங்கேயோ தவறு நடந்துள்ளமையைக் காட்டுகின்றது.

குறித்த பாடசாலைக்கு அனுமதி கிடைத்துள்ளதாக தமது பிள்ளைகளுக்குத் தெரிவித்து அதற்கான ஏற்பாடுகள் செய்து முடித்தபின்பு அதனை நிராகரிப்பது அந்தப் பிஞ்சு உள்ளங்களில் ஆழமான ஏமாற்றத்தைப் பதிவு செய்வதாகவும், அவர்களது மனோநிலையைப் பாதிப்பதாகவும் அமையும். இவை எமது சமூக வளர்ச்சிக்குக் குந்தமாகவே காணப்படும் என அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.