ரஞ்சனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இறுவட்டுகளில் சர்ச்சைக்குரிய உரையாடல்கள்! பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

Report Print Murali Murali in சமூகம்
130Shares

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் கைப்பற்றப்பட்ட இறுவட்டுக்களில் பதிவாகியிருக்கும் சர்ச்சைக்குரிய உரையாடல்கள் குறித்து உடனடி விசாரணையை வலியுறுத்தி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சட்டத்தரணி பிரேம்நாத் தொலவத்த தலைமையிலான குழுவினர் பொலிஸ் தலைமையகத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளனர்.

மேல்மாகாண குற்றத்தடுப்பு பிரிவினரால் கொழும்பு – மாதிவெல குடியிருப்புத் தொகுயில் வைத்து,நாடாளுமன்ற ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து பல இறுவட்டுக்கள் கைப்பற்றப்பட்டிருந்தன.

கைப்பற்றப்பட்டிருந்த இறுவட்டுகளில் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய உரையாடல்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அந்தக் கலந்துரையாடல்கள் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகப் பரவியும் வருகின்றன.

இந்நிலையில் சட்டத்தரணி பிரேம்நாத் தொலவத்த தலைமையிலான குழவினர் பொலிஸ் தலைமையகத்திற்கு இன்று விஜயம் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,

“கடந்த நான்கரை வருடங்களாகவும் இந்நாட்டு பொலிஸார், நீதிமன்றத்திற்கு அரசியல்வாதிகளின் அழுத்தங்கள் இருப்பதாக தெரிவித்துவந்தோம்.

இப்போது ரஞ்சன் ராமநாயக்க மற்றும் ஷாணி அபேசேகர ஆகியோருக்கு இடையில் நடத்தப்பட்ட கலந்துரையாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றது. அதேபோல நீதிபதி ஒருவருடன் நடத்திய பேச்சும் இன்று சமூக வலைத்தளத்தில் பதிவாகியிருக்கிறது.

கடந்த காலங்களில் முக்கியமான வழக்குகள் குறிப்பாக வசீம் தாஜுடீனின் படுகொலை வழக்கிலும் பொலிஸாரின் நடவடிக்கை குறித்து பேசினோம். ஒரு இலட்சத்துக்கும் அதிகமான குரல் பதிவுகள் இருப்பதாகவே அறியக்கிடைத்துள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவின் இந்த குரல் பதிவுகள் குறித்து உடனடி விசாரணை நடத்தும்படி நாங்கள் இன்று முறைப்பாடு செய்திருக்கின்றோம்.

ஷாணி அபேசேகரவின் செயற்பாடு ஒட்டுமொத்த பொலிஸாருக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.விசேடமாக நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ஆகியோரது கைதுகள் குறித்தும் குரல் பதிவுகளில் பேசப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீதிபதிகளின் தொலைபேசிகளுக்கும் யாராவது அழைப்பு மேற்கொண்டு அழுத்தம் வழங்கியிருக்கிறார்களா என்பதையே விசாரணை செய்ய வேண்டும்.

கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்சதான் நீதிமன்றங்களுக்கு அழுத்தங்களை பிரயோகித்ததாக கூறினார்கள்.

ஆனால் அவர்களுடைய காலங்களில் பாருங்கள், யார் நீதிமன்றங்களுக்கும், பொலிஸாருக்கும் அழுத்தம் கொடுத்தது என்பது இன்று தெளிவாகின்றது” என கூறியுள்ளார்.