உடவலவ தேசிய பூங்காவை அண்மித்த பகுதியில் வைத்து சிறுத்தை ஒன்று கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செவனகல - குமாரபுர பகுதியில் வசித்து வரும் சந்தேக நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
உடவலவ தேசிய பூங்காவிற்கு அருகிலுள்ள மவு அரா நீர்த்தேக்கத்திற்கு அருகே சிறுத்தை ஒன்று அண்மையில் மிகவும் கொடூரமாக கொல்லப்பட்டிருந்தது.
முன்கால்கள் இரண்டும் துண்டிக்கப்பட்டும், பற்கள் பிடுங்கப்பட்டும் மிகக்கொடூரமாக குறித்த சிறுத்தை கொலை செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், பொலிஸார் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.