தொடர்ச்சியாக சட்டவிரோத மண் அகழ்வு: கண்டுகொள்ளாத அதிகாரிகள் - பொது மக்கள் விசனம்

Report Print Ashik in சமூகம்

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் சட்டவிரோத மண் அகழ்வு சம்பந்தமாக உரிய அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என மக்கள் விசனம் வெளியிடுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அருவியாறு, கூராய், பாலியாறு போன்ற பகுதிகளில் டிப்பர் மற்றும் உழவு இயந்திரங்களில் சட்டவிரோதமாக மண் ஏற்றப்படுவதுடன் நானாட்டான் அருவியாற்றங்கரையில் மீன் வளர்ப்பிற்கு அனுமதி பெற்று மணல் வியாபாரங்கள் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.


இதனை கண்டு கொள்ளாத நிலையில் பொலிஸார் உள்ளனர் என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக மக்கள் மேலும் தெரிவிக்கையில்,

கனரக வாகனங்களின் அளவுக்கு அதிகமான போக்குவரத்துகளால் வீதிகள் சேதமடைந்து காணப்படுகின்றன.

ஓடைகளை குடைந்து அகழிகளாக தோண்டிச் செல்வதால் சாதாரண வெள்ளம் வந்தாலும் குடிமனைகள் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கடந்த வருடம் மன்னார் மாவட்டச் செயலகத்தின் அதிகாரிகள் வந்து பார்வையிட்டு மண் அகழ்விற்கு தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிப்புச் செய்தனர்.

எனினும் மீண்டும் அவ்விடத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. இதனை அதிகாரிகளும், பொலிஸாரும் கேட்பதில்லை.

பொதுமக்கள் யாரேனும் இது பற்றி கதைக்க ஆரம்பித்தால் அவர்களுக்கு வழங்கப்படும் சமுர்த்தி நிவாரணம் நிறுத்தப்படும் என்று அச்சுறுத்தல் விடுக்கிறார்கள்.

முன்னாள் அமைச்சரின் கையாட்கள் இப்பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபடுகிறார்கள். தனி மனிதர்களின் இலாபம் கருதி எமது இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதை இலங்கை கனிய வளம், சுற்றாடல் அதிகார சபை, பொலிஸார் மற்றும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.

தொடர்ச்சியாக இயற்கை வளச்சுரண்டல்களை மேற்கொள்ளும் மணல் மாபியாக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது யார்? என்றுகேள்வி எழுப்பி உள்ளனர்.