அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றும் பணி முன்னெடுப்பு

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு நகரில் மாநகரசபையின் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது முனை வீதியில் மட்டக்களப்பு மாநகரசபையின் அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த வர்த்தக நிலையம் ஒன்றின் அனுமதியற்ற பகுதிகளை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் க.சித்திரவேல் தலைமையில் மட்டக்களப்பு பொலிஸாரின் உதவியுடன் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

17-11-2015 அன்று குறித்த வர்த்தக நிலையத்தில் மாநகரசபையின் அனுமதிபெறப்படாமல் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு மட்டக்களப்பு மாநகரசபையினால் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதற்கு அமைய கடந்த 18-02-2019ஆம் ஆண்டு குறித்த கட்டட பகுதிகளை அகற்றுவதற்கு நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இருந்தபோதிலும் அந்த கட்டட உரிமையாளருக்கு மேன்முறையீடு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டு மே மாதம் அதற்கான நடவடிக்கையினை சட்டத்தரணி ஊடாக மேற்கொண்டிருந்தார்.

எனினும் தொடர் நடவடிக்கைகள் அவர்களினால் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் குறித்த கட்டடத்தின் பகுதிகளை அகற்றுமாறு அறிவுறுத்தல் மாநகரசபையினால் வழங்கப்பட்டிருந்தது.

அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் கடந்த வாரம் இதற்கான இறுதி அறிவித்தல் வழங்கப்பட்டு அதற்கும் அவர்கள் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் குறித்த பகுதிகளை அகற்றுவதற்கான செயற்பாடு மாநகரசபையினால் முன்னெடுக்கப்பட்டதாக மாநகர ஆணையாளர் க.சித்திரவேல் தெரிவித்துள்ளார்.