உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையோருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Report Print Varunan in சமூகம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 12 பேரையும் மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்முனை நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் இன்று குறித்த வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேநபர் ஒருவர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் மேலதிக விசாரணைக்காக 3 மாதங்களாக தடுத்துவைக்கப்பட்ட நிலையில் தடுப்புகாவல் நிறைவடைந்துள்ளதாக சந்தேகநபரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றுக்கு தெரியப்படுத்தினார்.

மேற்படி விசாரணைக்காக வந்த சந்தேகநபர்கள் அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பாதுகாப்பு தரப்பினர்களால் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கைதாகி பல மாதங்களிற்கு மேலான விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

மேலும் பொலிஸாரின் ஆட்சேபனை காரணமாக அனைத்து சந்தேகநபர்களதும் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டு இவ்வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி 21ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைதான சந்தேக நபர்கள் அனைவரும் காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவருகின்றது.