தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைகளில் திடீர் தேடுதல்

Report Print Steephen Steephen in சமூகம்

கொழும்பு மெகசீன் சிறையில் விடுதலைப் புலிச் சந்தேக நபர்களான தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை விடுதியில் துப்பாக்கி இருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய அங்கு விசேட தேடுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள G,H மற்றும் J ஆகிய சிறைகளில் இந்த அவசர தேடுதல் நடத்தப்பட்டு வருகின்றன.

இவற்றில் 80 சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக குழு குற்றவாளியான கோனாகோவிலே ரோஹா என்பவரை கொலை செய்வதற்காக இந்த துப்பாக்கி சிறைச்சாலைக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கோனாகோவிலோ ரோஹா என்பவர் G சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் துப்பாக்கி ஒன்று சிறைச்சாலைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இந்த தேடுதல் நடத்தப்பட்டு வருவதாக சிறைச்சாலை அத்தியட்சகர் ஜீ. கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.