வவுனியா மாவட்டத்தின் தேவைகள் தொடர்பில் அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடல்

Report Print Theesan in சமூகம்

வவுனியா மாவட்டத்தின் தேவைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று மாலை நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது வவுனியாவின் நான்கு பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

அந்தவகையில் வவுனியா நகரம் மற்றும் உப நகரங்களிற்குட்பட்ட முக்கிய வீதிகள் புனரமைக்கப்படுவது, விவசாய நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஏதுவான குளங்களை புனரமைத்தல், பொதுமக்கள் வருமானத்தை ஈட்டும் பொருட்டு மீன் குஞ்சுகளை நன்னீர் குளங்களில் விடுதல் போன்ற பல்வேறு விடயங்கள் பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச அதிபரால் இதன்போது முன்வைக்கப்பட்டிருந்தது.

இவற்றிற்கான திட்ட முன்மொழிவுகளை எதிர்வரும் 24ஆம் திகதிக்கு முன்னர் உத்தியோகபூர்வமாக வழங்குமாறும், எதிர்வரும் வரவு செலவு திட்டத்தின் போது அந்தந்த அமைச்சுகளினூடாக அவற்றை சமர்பிக்கவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் இதன்போது தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.