விடுதலைப் புலி போராளிகள் நாடாளுமன்றம் சென்றிருந்தால் போராட்டம் நிலைத்திருக்கும்

Report Print Theesan in சமூகம்

அன்று விடுதலைப் புலி போராளிகள் நாடாளுமன்றத்தை அலங்கரித்திருப்பார்களாக இருந்தால் விடுதலை போராட்டம் நிலைத்திருக்கும். அதன் மூலம் ஏதோவொரு விதத்திலாவது நாம் வெற்றியை பெற்றிருப்போம் என ஈழவர் ஜனநாயக முன்னணியின் தலைவர் க.துஸ்யந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அண்மையில் இடம்பெற்ற கட்சியின் இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் அரசியல் ரீதியான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால் அது இளைஞர்கள் மூலமாகவே முடியும். கடந்த ஆட்சியில் நாம் பல ஏமாற்றங்களை கண்டுள்ளோம்.

எனவே இளைஞர்கள் மூலமாக ஒரு அரசியல் புரட்சியை ஏற்படுத்தி எமக்கான உரிமைகளை பெற்றுக்கொள்வதில் நாம் உறுதியாக இருக்கிறோம். எமது கைகளில் அதிகாரம் இல்லாமையே இன்று நாம் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளிற்கு காரணமாக அமைந்திருக்கிறது.

விடுதலை போராட்ட காலத்தில் முக்கிய பங்காற்றிய பெண்கள் இன்று பல்வேறு துஸ்பிரயோக செயல்களிற்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். இதனை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இதற்கு எமது அரசியல்வாதிகளும் காரணமாக இருக்கிறார்கள்.

தமிழர் தரப்பு அரசியல்வாதிகள் எமது இளைஞர்கள் விடயத்தில் பின்வாங்கியே நிற்கிறார்கள். எனவே ஏனைய இனங்களால் ஏற்படும் அடக்கு முறைகளின் போது நாம் தமிழர்கள் என சொல்லி நிமிர்ந்து நிற்கும் சூழலை இளைஞர்களே உருவாக்க வேண்டும். இல்லையென்றால் நாம் மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம்.

வவுனியாவில் உள்ள அரச திணைக்களங்களில் தமிழர்கள் குறைவாகவே காணப்படுகின்றார்கள். எதிர்ப்பு அரசியல் நடத்தியமையே இதற்கு காரணம். எனவே அரசாங்கத்திற்கு ஆதரவழித்து எமது விடயங்களை தீர்த்து கொள்ளும் வழியை நாம் சொல்கிறோம்.

எமது இளைஞர்களின் எதிர்காலத்திற்காக இந்த அரசுடன் நாம் நல்லுறவினை ஏற்படுத்தி நிற்கிறோம். வடக்கு, கிழக்கில் பௌத்த மயமாக்கல், அரசியல் கைதிகள் காணி விடுவிப்பு போன்ற விடயங்களில் ஜனாதிபதியுடன் பேசியிருக்கிறோம்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் எமது கட்சியூடாக இளைஞர்களை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும். அன்று விடுதலைப்புலி போராளிகள் நாடாளுமன்றத்தை அலங்கரித்திருப்பார்களேயாக இருந்தால் விடுதலை போராட்டம் நிலைத்திருக்கும்.

அதில் ஏதோ ஒரு வீதத்தில் நாம் வெற்றியை பெற்றிருப்போம். ஆனால் அனுப்பப்பட்டவர்கள் தமது சுகபோகங்களை அனுபவிப்பவர்களாகவே இருந்தார்கள்.

எனவே வடக்கு, கிழக்கு, மலையக பகுதிகளில் அரசியல் புரட்சி மூலமான தேர்தல் வெற்றியினூடாக நாடாளுமன்றத்திலே எமது பிரச்சினைகளை கொண்டு செல்ல வேண்டும்.

தற்போது அனைவராலும் பேசப்பட்டு வரும் சர்வேதச விசாரணை என்பது ஒரு பொய்யான விடயம். இறுதி போரில் மக்கள் இறக்கும் போது முழு சர்வதேசமும் வேடிக்கையே பார்த்தது.

இது சாத்தியப்பட போவதில்லை. உள்நாட்டிற்குள் பேசி ஒரு தீர்வை காண்பதே சரியான வழிமுறை.

சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களிற்கு ஆதரவை கொடுத்து அவர்களை நாங்கள் இந்த நாட்டின் சட்ட திட்டத்தினூடாக விசாரிக்க கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

எனவே தற்போது அமைந்திருக்கின்ற அரசாங்கத்திற்கு ஆதரவை கொடுத்து எமது தேவைகளை பூர்த்தி செய்வதே ஒரே வழி என மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...