பிறந்த குழந்தையை வீட்டுக்கு பின்னால் புதைத்த யுவதி

Report Print Steephen Steephen in சமூகம்

திருமணமாகாத யுவதி ஒருவருக்கு பிறந்த பச்சிளம் குழந்தையை பிறந்தவுடனேயே வீட்டுக்கு பின்னால் புதைத்த சம்பவம் ஒன்று இரத்தினபுரி கொஸ்கல தோட்டத்தில் நடந்துள்ளது.

புதைக்கப்பட்டிருந்த குழந்தையை கண்ட அயலவர் ஒருவர் குழந்தையை உடனடியாக மீட்டுள்ளதுடன் உயிர் இருப்பதாக தெரிந்த பின்னர் வைத்தியசாலையில் அனுமதித்ததால் குழந்தையின் உயிரை காப்பாற்ற முடிந்துள்ளது.

18 வயதான தமிழ் யுவதி ஒருவர் தவறான தொடர்பால் கர்ப்பமாகியுள்ளதுடன் அதனை எவரிடமும் கூறாமல் மறைத்துள்ளார். இந்த நிலையில் நேற்றிரவு குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து யுவதியே தனது வீட்டுக்கு பின்னால், கைகளால் மண்ணை தோண்டி குழந்தையை புதைத்துள்ளார்.

காலையில் அந்த வழியாக சென்ற ஒருவர் குழந்தையின் கால்கள் மண்ணுக்கு வெளியில் இருப்பதை கண்டு, உடனடியாக குழந்தையை மீட்டுள்ளார். அப்போது குழந்தை உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து முச்சக்கர வண்டியில் குழந்தையை எடுத்துச் சென்று இரத்தினபுரி வைத்தியசாலையில் அவர் ஒப்படைத்துள்ளார்.

உடனடியாக செயற்பட்ட வைத்தியசாலை ஊழியர்கள், குழந்தையை அவசர சிகிச்சை பிரிவிற்கு கொண்டு சென்று சிகிச்சையளித்துள்ளனர். தற்போது குழந்தை உடல் நலத்துடன் இருப்பதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த குழந்தையின் தாயான யுவதியை இரத்தினபுரி பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இந்த யுவதி நாளைய தினம் இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.

Latest Offers