காணாமல் போன உறவுகளின் தலைவி பயங்கரவாத பிரிவினரால் விசாரணைக்கு அழைப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவியான என்னை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் அழைப்பாணை ஒன்றை இன்றைய தினம் வழங்கியுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி கா.ஜெயவனிதா தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் இன்றுடன் 1055 நாட்களாக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

எமது போராட்டம் மேற்கொள்ளும் பந்தலிற்கு வந்த புலானாய்வுத் துறையினர் இரண்டாம் மாடி விசாரணை பிரிவிற்கு எம்மை வருமாறு கோரி இன்றையதினம் காலை கடிதமொன்றினை தந்திருந்தனர்.

அக் கடிதத்தில் என்னையும், எனது கணவரையும் இம்மாதம் 13ஆம் திகதி 10 மணிக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளது.

இத்துடன் மூன்றாவது தடவை என்னை விசாரணைக்காக அழைத்திருக்கின்றார்கள். முதல் இரு தடவையும் என்னை தனியாக கூப்பிட்டிருந்தார்கள்.

இப்போது கணவரையும் வருமாறு அழைத்திருக்கின்றார்கள். இதனை நான் ஊடகங்கள் வாயிலாக தெரியப்படுத்தியே செல்ல விரும்புகின்றேன்.

சர்வதேசத்தின் கவனத்திற்கு இப்போராட்டம் எடுக்கப்பட்டு வரும் நிலையில் என்னை விசாரணைக்கு அழைப்பார்கள். கடந்த வருடமும் இவ்வாறே இடம்பெற்றிருந்தது.

புதிய ஜனாதிபதி வந்ததன் பின்னர் எங்களுடைய போராட்டங்களை பற்றி சர்வதேசத்தின் கவனத்திற்கு எடுத்திருக்கிறார்கள். அதனால் என்னை மீண்டும் இரண்டாம் மாடிக்கு வருமாறு அழைத்திருக்கிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...