போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - கிண்ணியா பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் இன்றைய தினம் சந்தேகநபரை ஆஜர்படுத்திய போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 5 கிராம் 140 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் செவ்வாய்க்கிழமை கிண்ணியா பொலிஸார் சந்தேகநபரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை தடுத்து விசாரிப்பதற்கு அனுமதி தருமாறு இன்றைய தினம் கிண்ணியா பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.

இக்கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட நீதவான் 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு அனுமதி வழங்கினார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா றகுமானியா வீதியைச் சேர்ந்த 36வயதுடைய சம்மூன் மஸாரிக் எனத் தெரியவருகின்றது.

அத்துடன் இவரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

Latest Offers

loading...