அரசியல் கைதி சிறையில் உயிரிழந்தமையை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்

Report Print Sumi in சமூகம்

அண்மையில் சிறைச்சாலையில் உயிரிழந்த அரசியல் கைதியின் மரணத்தைக் கண்டித்தும், ஏனைய அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று நண்பகல் 12 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ் அரசியற் கைதியான செல்லப்பிள்ளை மகேந்திரன் அவரது 27 வயதில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, தனது 46ஆவது வயதில் மகஸின் சிறைச்சாலையில் உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் மரணத்தைக் கண்டித்தும், சிறைச்சாலைகளில் அதிக வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும், இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷங்களை எழுப்பியும், பதாதைகளை ஏந்தியும் தமது கணடனத்தை வெளியிட்டிருந்தனர்.

இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.