வாழைச்சேனையில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு விளக்கமறியல்

Report Print Navoj in சமூகம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் hp-56 ரக துப்பாக்கியை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி முகமட் றிபான் முன்னிலையில் சந்தேக நபரை முன்னிலைப்படுத்திய போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து படையினர் மேற்கொண்ட விசாரணையின் போது குறிஞ்சி நகர் கறுவாக்கேணி எனும் இடத்தில் வைத்து நேற்றிரவு சந்தேகநபர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது மேலும் இருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களில் ஒருவர் விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது hp-56 துப்பாக்கி ஒன்றும், அதற்கு பயன்படுத்தும் 27 ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்,மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.