வவுனியா வளாகத்தினை வவுனியா பல்கலைக்கழகமாக மாற்ற அமைச்சரவை பத்திரம் தாக்கல்

Report Print Theesan in சமூகம்

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வவுனியா பல்கலைக்கழகமாக மாற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக ஈழமக்கள் ஜனநாய கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் கு. திலீபன் தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் அவர் இன்று கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா வளாகத்தை வவுனியா பல்கலைக் கழகமாக மாற்ற கடந்த ஆட்சிக்காலத்தில் பலரும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் முயற்சி எடுத்தவர்கள் ஏமாற்றப்பட்ட வரலாறே காணப்பட்டது.

இவ்வாறு ஏமாற்றப்பட்ட விடயம் வவுனியா வளாகத்தின் செயற்பாட்டில் மாத்திரமல்ல தமிழ் மக்களின் அடிப்படைத்தேவைகளில் இருந்து அனைத்திலும் ஏமாற்றப்பட்டனர்.

இந்நிலையிலேயே எமது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்போது தமிழ் மக்கள் தொடந்தும் ஏமாற்றப்படக்கூடாது என்பதில் அக்கறையாக உள்ளார்.ஒவ்வொரு செயற்பாட்டையும் மக்கள் நலன்சார்ந்து செயற்படுத்தி வருவதனாலேயே இன்று மக்கள் அமைச்சரின் பின் அணிதிரண்டு வருகின்றனர்.

அந்த வகையில் வவுனியா வளாகத்தினை வவுனியா பல்கலைக்கழகமாக மாற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய அதற்கான முயற்சி எடுக்கப்பட்டு தற்போது அமைச்சரவை பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே விரைவில் வவுனியா வளாகம் வவுனியா பல்கலைக்கழகமாக மாறும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.