ஹட்டனில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 23 பேர் படுகாயம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஹட்டன், கண்டி பிரதான வீதியில் கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தியகல பகுதியில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளன.

குறித்த சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், இதில் 23 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி சென்ற தனியார் பேருந்தும், கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற பேருந்துமே நேருக்கு நேர் மோதியுள்ளதாக தெரியவருகிறது.

காயமடைந்த 23 பேரில் 22 பேர் வட்டவளை வைத்தியசாலையிலும், ஒருவர் கினிகத்தேனை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 11 பேர் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளதோடு, மேலும் 6 பேர் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை நான்கு பேர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி சென்ற தனியார் பேருந்து வீதி விதிகளை மீறி பயணித்ததாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.