வர்த்தகர்களை கண்டுகொள்ளாத யாழ்.மாநகர சபை: வணிக சங்கத்தினர் விசனம்

Report Print Sumi in சமூகம்

யாழ்.நகர் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் குறைபாடுகள் தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபை எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என யாழ்ப்பாணம் வணிகர் சங்கத்தின் தலைவர் ஜனகுமார் கவலை வெளியிட்டுள்ளார்.

யாழ்.வர்த்தக சங்கத்தினர் தொடர்ச்சியாக எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் தொடர்பில் எமது செய்தியாளர் இன்று அவரை தொடர்பு கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2018ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் யாழ்ப்பாணம் நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆளுகைக்கு கீழ் உள்ள நவீன சந்தை கட்டடத் தொகுதியில் உள்ள பிரச்சினைகள் குறைபாடுகள் தொடர்பில் எந்த ஒரு விடயமும் தீர்க்கப்படவில்லை.

பல்வேறு தரப்பட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு தமக்குரிய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண யாழ்ப்பாணம் மாநகரசபை முன்வரவில்லை.

அத்தோடு அண்மையில் யாழ்ப்பாணம் மாநகர சபையில் இடம்பெற்ற விடயமானது அருவருக்கத்தக்க சம்பவமாகும்.

இவ்வாறான சம்பவங்கள் இனியும் இடம்பெறாத வண்ணம் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் செயற்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.