நுவரெலியாவில் மரக்கறி உற்பத்தியில் வீழ்ச்சி: வியாபாரிகள் பாதிப்பு

Report Print Thiru in சமூகம்

மலையகத்தில் தொடர்ந்து மூன்று மாதங்களாக பெய்து வந்த கன மழை காரணமாக மரக்கறி உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளதால் அப்பகுதியில் உள்ள சிறியளவிலான மற்றும் நடைபாதை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலைய மொத்த விலையில் இன்று கோவா125 - 130 ரூபாய்க்கும், சலாது 110ரூபாய்க்கும், கொத்தமல்லி 320 ரூபாய்க்கும், கரட் 420 ரூபாய்க்கும், லீக்ஸ் 290 ரூபாய்க்கும், பீட்ருட் 110.ரூபாய்க்கும், கிழங்கு 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த மரக்கறி வகைகள் கொழும்பு மற்றும் தம்புள்ள பிரதேசங்களில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களுக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்லப்படுகின்றன.

அண்மையில் பெய்த மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளத்தினால் மரக்கறிகள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

மரக்கறி தோட்டத் தொழிலாளர்களுக்கும் தோட்டங்களில் தொழில் செய்ய முடியவில்லை. தொடர்ந்து பெய்த மழை காரணமாக விவசாய மண் களிதன்மை அடைந்தமையினால் மரக்கறிகளின் வளர்ச்சி விகிதம் குறைவடைந்துள்ளது.

விவசாய நிலங்களுக்கு போடப்பட்ட சேதன மற்றும் அசேதன உரங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. ஏற்கனவே பயிர் செய்யப்பட்ட சில மரக்கறி வகைகள் மழை கராணமாக அழுகியுள்ளன.

இதனால் தற்போது வங்கியில் கடன் பெற்று விவசாய நடவடிக்கைகளில் ஈடுப்பட்டோர் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

இந் நிலையில் மரக்கறி உற்பத்தியில் ஈடுப்பட்டோரும், விற்பனைகளில் ஈடுப்பட்டோரும் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கும் போதுமான அளவில் மரக்கறிகள் வராததினால் ஏனைய பிரதேசங்களுக்கு அனுப்ப முடியாமலும் இருக்கின்றது.

மரக்கறி உற்பத்தியாளர்களின் வருகையும் குறைந்துள்ளது. இத்துறையில் வீதியோரங்களிலும் சிறிய கடைகளிலும் சுயதொழிலாக மரக்கறி விற்பனையில் ஈடுபட்டவர்களும் பாதிப்படைந்துள்ளனர்.

வாகனங்களில் வருவோர் விலையை கேட்டதும் வாங்காமல் சென்றுவிடுகின்றனர். இதனால் இவர்கள் கொள்வனவு செய்த மரக்கறிகளும் பழுதடைந்து வருகின்றது.

எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட மரக்கறி செய்கையாளர்களுக்கு தீர்வொன்றை பெற்றுத்தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.