காணாமல் ஆக்கப்பட்ட என்னுடைய பிள்ளையென சிங்கள மொழி பேசும் பிள்ளையை காட்டினார்கள்! ஜெயவனிதா

Report Print Theesan in சமூகம்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவே இரண்டாம் மாடி விசாரணைக்கு அழைத்திருந்தார்கள் என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வவுனியா மாவட்ட சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தெரிவித்துள்ளார்.

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1060 நாட்களாக போராட்டம் மேற்கொள்ளும் பந்தலில் இன்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் கொழும்பிலுள்ள இரண்டாம் மாடி விசாரணைக்காக நானும் என்னுடைய கணவரும் போயிருந்தோம். உங்களுடைய பிள்ளை இதுதானா எனக் கூறி ஒரு ‌பெண் பிள்ளையை காட்டினார்கள்.

இது என்னுடைய பிள்ளை இல்லையென்று கூறி மறுத்தேன். இல்லை நீங்கள் படத்தில் காட்டும் பிள்ளை தான் இந்த பிள்ளை எனக் கூறினார்கள்.

என்னுடைய பிள்ளைக்கும் நீங்கள் காட்டும் பிள்ளைக்கும் வித்தியாசம் உள்ளது. இதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். பொலன்னறுவையிலிருந்து சிங்கள மொழி பேசுகின்ற பிள்ளையை கொண்டுவந்திருந்தார்கள்.

எங்களுடைய பிள்ளைகள் தமிழ் பேசும் பிள்ளைகள். இதனை நான் ஏற்றுக்கொள்ள முடியாதென்று கூறி நான் முற்றுமுழுதாக மறுப்பு தெரிவித்திருந்தேன்.

இந்த பிரச்சினையை இத்தோடு முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அதுதான் நாங்கள் இவ்வளவு காலமும் எடுத்த முடிவு. இன்றைக்கு தான் எங்களுக்கு கையில் பிள்ளை கிடைத்திருக்கிறது. அதனால் தான் நாங்கள் இன்று உங்களை விசாரணைக்கு கூப்பிட்டிருப்பதாக அவர்கள் கூறினார்கள்.

நீங்கள் பிரச்சினையை முடிக்கலாம். ஆனால் என்னுடைய பிள்ளையென கூறி பிரச்சினையை முடிக்க வேண்டாம் என கூறியிருந்தேன்.

படத்தில் இருப்பது என்னுடைய பிள்ளை. ஆனால் நீங்கள் கொண்டு வந்து காட்டிய பிள்ளை என்னுடையதில்லை. படத்தில் இருப்பது தான் என்னுடைய பிள்ளை என உறுதியாக கூறியிருந்தேன்.

இப்போது அவர்களுக்கு எங்களுடைய போராட்டத்தை மழுங்கடிக்கிறது தான் அவர்களுடைய நோக்கமாகவுள்ளது.

நீங்கள் தான் காணாமல் போன சங்கத்தின் தலைவியா என என்னிடம் கேட்டிருந்தார்கள். நான் ஓமென கூறியிருந்தேன். நான் என்னுடைய பிள்ளை மட்டும் தான் காணாமல் போனதென கேட்கவில்லை. எல்லா தாய்மார்களுடைய பிள்ளைகளையும் தான் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

என்னுடைய பிள்ளைக்காக மட்டும் நான் குரல் கொடுக்கவில்லை. எல்லோருடைய பிள்ளைகளுக்காகவும் தான் குரல் கொடுக்கின்றேன். என்னுடைய பிரச்சினையை முடிக்கவும் இயலாது.

போராட்டத்தில் ஈடுபடும் தாய்மார்களுக்கு எங்களுடைய தமிழ் மக்கள் எல்லோரும் ஒன்றாக குரல் கொடுப்போம். நாங்கள் உண்மையாக வெளிநாடுகளை தான் கேட்டுக்கொண்டிருக்கிறோம். எங்களுடைய பிள்ளைகளிற்கு சரியான ஒரு தீர்வு கிடைப்பதாக இருந்தால் வெளிநாடுகள் தான் வரவேண்டும்.

நேற்றைய விசாரணையின் போது அவர்களிடமும் நான் அதனை கூறியிருந்தேன். வெளிநாடுகள் வந்து எங்களுடைய பிரச்சினையை முடிப்பதாக இருந்தால் நாங்கள் அதனை ஏற்றுக்கொள்வோம் என கூறியிருந்தேன். நீங்கள் சரியான முறையில் பிரச்சினையை முடிக்க மாட்டீர்கள்.

இவ்வாறு எல்லோரும் தனித்தனியாக இருந்தால் ஒவ்வொருவராக விசாரணைக்கு கூப்பிட்டு எங்களுடைய போராட்டங்களை மளுங்கடிக்க செய்துவிடுவார்கள். எல்லா தாய்மாரும் ஒன்றாக இணைந்து வெளிநாட்டினுடைய உதவியை கேட்பதாக இருந்தால் இரண்டு, மூன்று மாதங்களில் தீர்வினை பெறமுடியும்.

தமிழ் மக்கள் அனைவருக்கும் சேர்த்தே நான் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.தமிழருடைய பிரச்சினை தீரவேண்டும்.

நானும் ஒரு தமிழன் தான் எங்களுடைய பிரச்சினை தீர்ந்தால் தான் முற்றுமுழுதாக இலங்கையில் தமிழ் மக்களுடைய பிரச்சினை தீர்விற்கு சமன்.

மழுங்கடிக்கும் நோக்குடனே இந்த விசாரணை பிரிவிற்கு ஒவ்வொருவரையும் கூப்பிடுகிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.