பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்யுமாறு கோரி முல்லைத்தீவில் போராட்டம்!

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவில் உள்ள வேணாவில் சிறீ முருகானந்தா வித்தியாலய பாடசாலையின் அதிபரை இடமாற்றம் செய்யுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள குறித்த பாடசாலைக்கு முன்பாக இன்று காலை இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இப்பாடசாலையில் கடந்த பத்து ஆண்டுகளாக ஒரே அதிபர் காணப்படுவதாகவும், அதிபரின் செயற்பாடுகள் காரணமாக பாடசாலையில் புதிதாக இணையும் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன் கல்வி கற்கும் மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டிலும் மற்றும் அனைத்து துறைகளிலும் குன்றிக்கொண்டு செல்வதை அவதானிக்க முடிந்துள்ள நிலையினை கருத்தில் கொண்டு அதிபரை மாற்றுமாறு பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரும் முகமாக பெற்றோர்கள், பழைய மாணவர்கள், பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து மனு ஒன்றினை முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் ச.கனகரத்தினத்தின் செயலாளரிடம் கையளித்துள்ளனர்.

இந்நிலையில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி.அமரசிங்க தலையீட்டினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு வலயக்கல்வி பணிப்பாளர் உமாநிதி புவனராஜா வரவழைக்கப்பட்டார்.

பாடசாலையில் இந்த அதிபர் இனி பணி செய்யமாட்டார் என அவர் வழங்கிய வாக்குறுதியினை தொடர்ந்து, போராட்டக்காரர்கள் கலைந்து சென்றுள்ளனர்.