காணாமல்போயிருந்த கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு

Report Print Kumar in சமூகம்
605Shares

கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் காணாமல்போயிருந்த மலையகத்தைத் சேர்ந்த கிழக்குப் பல்கலைக்கழக மாணவன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவு பகுதியில் குறித்த மாணவனின் சடலம் கரையொதுங்கியுள்ளது என வவுணதீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரபத்தனை, ஹோல்புறுக் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி மோகன்ராஜ் (21) என்ற கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடத்தில் இரண்டாம் வருடத்தில் கல்வி பயிலும் மாணவன் கடந்த 10ம் திகதி முதல் காணாமல்போயிருந்தார். இவரைத் தேடும் பணி நான்கு நாட்களாகத் தொடர்ந்தது.

மாணவனின் கையடக்கத் தொலைபேசியை அடிப்படையாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கல்லடிப் பாலத்துக்கு அருகாமையில் வைத்தே இறுதியாக தொலைபேசி இயங்கியுள்ளமை கண்டறியப்பட்டது.

அத்துடன், சி.சி.டி.வி. கமரா காட்சிகளும் ஆராயப்பட்டன. தொலைபேசி உரையாடல் குறித்த குரல் பதிவும் ஆராயப்பட்டது.

இவ்விவகாரத்தைக் கையாள்வதற்குத் தனிப் பொலிஸ் குழுவும் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் சடலம் ஒன்று மீட்பு

மட்டக்களப்பில் இன்று பிற்பகல் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு - வவுணத்தீவு, கரையாக்கன்தீவினை அண்டியுள்ள பகுதியில் குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சடலம் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனுடையதாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலதிக செய்தி - ராகேஸ்