இரண்டு மாதங்களில் ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை மீண்டும் திறக்கப்படும்: விமல் உறுதி

Report Print Vanniyan in சமூகம்

இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலையை மீண்டும் இயங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அரச முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டானில் உள்ள ஓட்டு தொழிற்சாலைக்கு இன்றையதினம் விஜயம் செய்த அமைச்சர் பாழடைந்துள்ள ஓட்டு தொழிற்சாலையை பார்வையிட்டு அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,

1983ஆம் ஆண்டோடு இயங்காது போன இந்த ஓட்டு தொழிற்சாலையை விரைவில் இந்த அரசின் காலத்தில் இயங்க வைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளேன். இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதத்தில் இந்த தொழிற்சாலை இயங்க வைக்கப்படும் அதற்காக இந்த துறையில் அனுபவம் வாய்ந்த ஒருவரை தலைவராக நியமித்துளோம்.

இந்த பிரதேசத்தின் அனைத்து மக்களிடமும் உங்களுடைய ஒத்துழைப்பை இதற்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். இந்த பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவே இந்த தொழிற்சாலையை ஆரம்பிக்கவுள்ளோம்.

இந்த தொழிற்சாலையின் முழுமையான பிரதிபலன் இந்த பிரதேசத்துக்கே கிடைக்கப்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜனாதிபதி கோட்டாபயவின் புதிய அரசாங்கத்தில் கைத்தொழில், விவசாய துறைகளை மேம்படுத்துவதையே கருப்பொருளாக கொண்டுள்ளோம். முழுமையாக தடைபட்டுள்ள வடக்குக்கான இந்த துறைகளும் மேம்படுத்தப்படும் .

இந்த பிரதேச மக்களிடம் காட்டப்பட்ட படம்தான் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்தால் அடுத்த நாளே இராணுவ ஆட்சி உருவாக்கப்படும் என்று, ஆனால் இன்று நடைபெறுவதை வைத்து பார்க்கும் போது அவை அனைத்தும் பொய் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.

அரசாங்கத்துக்கும் இப் பிரதேச மக்களுக்கும் இடையில் இடைவெளியை ஏற்படுத்தி சிலர் அதன்மூலம் இலாபம் அடைய பார்க்கின்றார்கள். அந்த பிரிவினைவாத சக்திகளுடன் ஒன்றிணையாமல் அரசாங்கத்தின் அபிவிருத்தி பணிகளுடன் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...