தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீட்டுத்திட்டங்களினால் பயனாளிகள் பாதிப்பு

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்களுக்கான கொடுப்பனவுகள் முழுமையாக இதுவரை வழங்கப்படாமையினால் வீட்டுத்திட்டப்பயனாளிகள் தமக்கான வீடுகளை முழுமைப்படுத்த முடியாத நிலையில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த ஆண்டு முற்பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் வீட்டுத்திட்டங்கள் கிடைக்கப்பெறாத குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு இவ்வாறான குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டங்கள் கடந்த மார்ச் மாதம் வழங்கப்பட்டிருந்தன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தைகிழக்கு, துணுக்காய், ஒட்டுசுட்டான் முல்லைத்தீவு, கரைதுரைப்பற்று, வெலிஒயா ஆகிய ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலா ஏழரை இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டு முதலாம் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட கொடுப்பனவுகளாக ஒரு இலட்சம் ரூபா, ஒன்றரை இலட்சம் ரூபா பகுதிக்கொடுப்பனவுகள் மாத்திரம் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஏனைய கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படாத நிலையில் வீட்டுத்திட்ட பயனாளிகள் தமக்கான வீடுகளுக்குரிய கட்டுமானப்பணிகளை தொடங்கி அவற்றை இடைநடுவில் கைவிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 2211 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு 2211 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கென 1589 மில்லியன் ரூபா நிதி தேவையான நிலையில், 428 மில்லியன் ரூபா நிதி இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதென்றும், இது தொடர்பில் அமைச்சு மட்டத்தில் கலந்துரையாடியுள்ளதாகவும், அண்மையில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...