வவுனியாவில் அம்மாச்சி உணவகங்கள் மூடப்படுவதன் பின்னணி! மாகாண விவசாய பணிப்பாளர்

Report Print Theesan in சமூகம்

வவுனியா விவசாய திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் ஒரு அம்மாச்சி உணவகம் மாத்திரமே இருப்பதாக வவுனியா பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் சகிலாபாணு தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அண்மையில் மூடப்பட்ட இரு அம்மாச்சி உணவகங்கள் தொடர்பாக இன்று அவரிடம் எமது செய்தியாளர் கேட்டபோதே இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

விவசாய திணைக்களமானது அமுதம் பெண்கள் விவசாய அமைப்பை உருவாக்கி அதில் உள்ள பெண்களுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கி அம்மாச்சி உணவகங்களை நடத்துவதற்கான அனுசரணையினை வழங்கி வருகிறது.

வவுனியாவை பொறுத்தவரை புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் அம்மாச்சி உணவகம் மாத்திரமே எமது கட்டுப்பாட்டில் இருப்பதுடன் அதில் நேரடியான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம்.

ஏனைய இடங்களில் அந்தந்த நிறுவன தலைவர்கள் கேட்டுக்கொண்டதற்கமைவாக அமுதம் விவசாய பெண்கள் அமைப்பிலிருந்து எம்மால் பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களை அந்த அமைப்பே வழங்கியிருந்ததே தவிர விவசாய திணைக்களம் அதனை நடத்துவதற்கான வழிவகைகளை ஏற்படுத்தவில்லை.

இதனால் வவுனியா வைத்தியசாலை மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்தில் அமைந்திருந்த உணவகங்கள் சரியான முறையில் வாடகை பணம் கொடுக்க முடியாமையினால் கடந்த சில நாட்களுக்கு முன் மூடப்பட்டுள்ளன.

வாழ்வாதாரத்திற்காக சிரமப்படும் பெண்கள் என்பதால் அந்த தொகையை அவர்களால் வழங்கமுடியவில்லை.

எனவே ஊடகங்கள் பிரச்சினையின் உண்மை தன்மையினை புரிந்து கொண்டு செய்திகளை வெளியிட வேண்டும்.

விவசாய திணைக்களத்தின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள அம்மாச்சி உணவகம் மாதாந்தம் 45 இலட்சம் ரூபாவை வருமானமாக ஈட்டுகிறது.

அங்கு 36 பெண் ஊழியர்கள் பணிபுரிந்து பலனடைகின்றனர். மூடப்பட்ட உணவகங்களில் பணிபுரிந்த பெண்களையும் நாம் அதில் உள்ளீர்த்துள்ளோம்.

அத்துடன் எமது நேரடியான கண்காணிப்புடன் பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா வளாகத்திலும் எதிர்வரும் நாட்களில் அம்மாச்சி உணவகம் ஒன்று அமைக்கவுள்ளோம் என்று கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்பில் விவசாய திணைக்களத்தின் பொறுப்பதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

அம்மாச்சி உணவகங்கள் பெண்களின் வாழ்வாதரத்தை மையமாக கொண்டு இயங்குகின்றன.

இதனால் வைத்தியசாலை மற்றும் பிராந்திய சுகாதார பணிமனை வளாகத்தில் அமைந்திருந்த உணவகங்களுக்கான வாடகை பணத்தினை அதனை நடத்தும் பெண்களால் வழங்க முடியவில்லை.

வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகத்திற்கு மாத வாடகையாக 90,000 ரூபா வழங்க வேண்டியிருந்தது.

அத்துடன் பல நோயாளர்களின் தேவை கருதி அசைவ உணவுகள் மற்றும் தேநீர் போன்றவற்றையும் உள்வாங்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்தது.

அம்மாச்சி உணவகத்தின் கட்டமைப்புகளின் பிரகாரம் அதனை வழங்க முடியவில்லை. இவற்றை ஈடுசெய்ய முடியாமையினாலேயே குறித்த இரண்டு உணவகங்களையும் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.