உண்ணாபுலவு வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லாமையினால் அவதிப்படும் நோயாளர்கள்

Report Print Vanniyan in சமூகம்

முல்லைத்தீவு - உண்ணாப்புலவு பகுதியில் அமைந்துள்ள பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லாததால் நோயாளர்கள் அவதிப்படும் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக குறித்த வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவதற்காக செல்லும் நூற்றுக்கணக்கான மக்கள் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

மிக நீண்டகாலமாக இயங்கிவரும் இந்த வைத்தியசாலையில் நிரந்தரமாக கடமையில் இருந்த வைத்தியர் தற்காலிக இணைப்பில் புத்தளம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்ற நிலையிலும் ஏற்கனவே தற்காலிகமாக கடமையாற்றிய வைத்தியர் வேறு இடத்திற்கும் மாற்றலாகி சென்றதன் காரணமாகவும் உண்ணாபுலவு வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லாத நிலை காணப்படுகிறது.

இது தொடர்பில் அப்பகுதி மக்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

அவசர நிலைமைகளின் போதும் சிகிச்சை பெறுவதற்காக வருகின்ற நேரங்களில் குறித்த வைத்தியசாலையில் வைத்தியர் இல்லை என கூறும் நிலைமையே காணப்படுகின்றது.

மிக நீண்டகாலமாக போருக்கு முன்னர் வினைத்திறனான சேவை ஆற்றிய இந்த வைத்தியசாலை இன்று வைத்தியர்கள் இல்லாது இயங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தை புறக்கணிக்கும் நிலையாகவே நாம் இதனை பார்க்கின்றோம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிகிச்சை பெறுவதற்காக வருகை தந்து திரும்பி செல்லும் நிலையே காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சுகந்தன் கருத்து தெரிவிக்கையில் ,

மிக நீண்டகாலமாக இயங்கிவரும் இந்த வைத்தியசாலையில் நிரந்தரமாக கடமையில் இருந்த வைத்தியர் தற்காலிக இணைப்பில் புத்தளம் மாவட்டதுக்கு மாற்றலாகி சென்ற நிலையிலும் ஏற்கனவே தற்காலிகமாக கடமையாற்றிய வைத்தியர் வேறு இடத்துக்கு மாற்றலாகி சென்றதன் காரணமாகவும் வைத்தியர்கள் இல்லாத நிலை காணப்படுகிறது.

இந்த நிலைமை கடந்த சில மாதங்களாக காணப்படுகின்றது. நான் புதிதாக வருகை தந்த பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி என்ற நிலைமையில் இந்த விடயங்கள் குறித்து ஆராய்ந்து உள்ளூர் வைத்தியசாலைகளில் உள்ள வைத்தியர்களிடம் இந்த வைத்தியசாலைக்குரிய கடமையையும் கவனித்து கொள்ளுமாறு கேட்டிருந்தேன். அவர்களும் அதனை மறுத்திருந்தார்.

பிரதானமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள வைத்தியர்களை சந்தித்து இந்த வைத்தியசாலையின் கடமைகளையும் கவனித்துக்கொள்ளுமாறும் கேட்டிருந்தேன். ஆனால் அங்கேயும் கடமைகள் இருக்கின்ற நிலைமையில் தங்களால் முடியாது என அவர்களும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலைமைகள் குறித்து முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருக்கும் தெரியப்படுத்தியுள்ளேன். ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் தலைமையில் நடைபெற்ற சுகாதார திணைக்களத்தினுடனான சந்திப்பிலும் இந்த பிரச்சனை குறித்து தெரியப்படுத்தியுள்ளேன்.

வைத்தியர்கள் இல்லாத நிலைமையில் நோயாளர்கள் தொடர்ந்து திரும்பி செல்வது நல்லதல்ல இந்த வைத்தியசாலை ஆரம்பத்திலிருந்தே முல்லைத்தீவுக்குரிய பிரதானமான வைத்தியசாலையாக செயற்பட்டதன் காரணமாக இங்கே நோயாளர்கள் வருவதற்கு பழக்கப்படுத்திக் கொண்டுள்ளனர்.

நான் உட்பட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், செயலாளர்கள், ஆளுநர் மற்றும் சுகாதார அமைச்சு எல்லோரும் இந்த விடயத்தை கருத்தில் எடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் .

இதற்கு இரண்டு தற்காலிக தீர்வுகளை முன்வைத்துள்ளேன். இந்த வைத்தியசாலைக்கான நிரந்தர வைத்தியரை நியமிக்கும் வரை தற்காலிகமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் (மாஞ்சோலை) சிறுநீரக பிரிவில் இருக்கின்ற வைத்தியர்களின் ஒருவர் இங்கே வருகைதந்து கடமைகளை கவனித்துக்கொள்ளலாம் மற்றும் போதனா வைத்தியசாலையிலிருந்து உள்ளக பயிற்சிகளை முடித்து நியமனத்துக்காக காத்திருக்கும் வைத்தியர்களில் ஒருவரை நியமிப்பதன் இந்த நிலைமைகளை தீர்த்துக்கொள்ளலாம் என சில தற்காலிக தீர்வுகளை முன்வைத்துள்ளார்.

Latest Offers

loading...